இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, October 17, 2023

தோழமை போற்றி ......

தோழமை போற்றத் தொடர்கிறேன்
தொகுக்கப்படாத காவியங்களாய் 
என் எண்ணக் கருக்கள் 
தேங்கிக்கிடக்கிறது 
காலம் கடந்த ஞானமாய்
நாற்பதை அடைந்தபோது 
திரும்பிப்பார்கிறேன் தனிமரமாய் 
வெட்டவெளியில் ஓய்ந்து நிற்கிறேன் 
வெறுமை உணர்ந்தேன் 
வேதனை கொண்டேன் 
ஓடியிருக்கிறேன் எதுவரை என்று 
தெரியாமலே ஒடியிருக்கிறேன் 
நட்புகளை விட்டு விரட்டப்பட்டிருக்கிறேன் 
நாட்கள் என்னை விரட்டியிருக்கிறது 
இழந்திருக்கிறேன் என்னருமை
தோழர்களுள் சிலரை இழந்திருக்கிறேன் 
நானும் நாளை அவ்வாறுதானே 
இறந்திருப்பேனென்று நினைத்து 
இன்று எதை தேடியிருக்கிறேன் 
விடுபட்டிருந்த என் நட்புகளை 
தொடரத்துடிக்கிறேன் 
துண்டிக்கப்படாத 
பாசப்பிணைப்புகளை 
அனுபவித்திடத் துடிக்கிறேன் 
மரணம் வரை எனைச் சுற்றி 
நண்பர்களோடு மட்டுமே நலம்பெறவும் 
ஈருலக வெற்றியை அடைந்திடவும்  
இறைவனே அருள்புரிவாயாக 
கசப்பெனும் வெறுப்பை 
கடுகளவேனும் வைத்திடாது 
நண்பர்களோடு மகிழ்ந்திட 
என்னிறைவா அருள்புரிந்திடு 
நண்பனின் அன்பிற்காய் நான் துடிக்க 
அகலநின்று வேடிக்கை ஏன் நண்பா 
வா என்னோடு கலந்து மகிழ்ந்திட வா
நாளை நீயும் என்போல் துடித்திடுவாய் 
இன்றயதை நன்மையாக்கிட வா
நண்பா என்போல் மனமுள்ளவனே 
நீயும் என்போல் தேடிவா கூடிவா......

Saturday, September 9, 2023

மகிழ்வெனக்கு இன்று

ஏக வல்லோன் எனக்கென 
படைத்துக் கருவறையில் காத்து 
இன்று போலெரு தினத்தன்று 
ஈந்தளித்தான் உனை 
மகிழ்வெனக்கு இன்று 

சாந்தம் உன்னால் என்வாழ்வில் 
சரித்திரம் உனக்காய் படைத்திட 
சரிசம வாழ்வளித்து 
வழி நடாத்துகிறாய் ஆதலால் 
மகிழ்வெனக்கு இன்று 

தந்தை மனம் வென்றாய் 
தாய் உளம் சிறந்தாய் 
சேய்களை வழிநாடத்துகிறாய் 
உறவுகளை பேணுகிறாய் அதனால் 
மகிழ்வெனக்கு இன்று 

ஐவேளை தொழுகின்னாய்
திருமறை ஓதுகின்றாய் 
மார்க்கக் கல்வியுடன் தொடர்கிறாய் 
சுவனம் காத்திருக்கிறதுனக்கு என்பதால் 
மகிழ்வெனக்கு இன்று 

என்னுயிர் சுமக்கிறாய் 
உனை உயிராய் சுமக்கிறேன் 
நாளை எம் வாழ்வு சிற்க்க 
முனைப்புடன் தொர்கிறோமென 
மகிழ்வெனக்கு இன்று

இன்றுபோல் என்றும் இன்பமாய் 
திகள இறைவனை இருகரமேந்துகிறேன் 









Wednesday, March 10, 2021

நிர்பந்தச் சிறைவாசம்



எண்ணக் கருக்கள் கொட்டிக்கிடக்க 
ஏன் இப்படி ஓடியிருக்கிறேனென்று 
நிர்ப்பந்தச் சிறைவாசமொன்றில் 
நிந்திக்கிறது என் கனத்த மனமிங்கு 

ஓராயிரம் நிகழ்வுகள் 
என்னைக் கடந்திருந்த போதும்
தேவைகளின் அழுத்தத்தில் 
வேலையில் மூழ்கியிருந்தேன்  

தன்னந்தனிமையில் எத்தனை துரம் 
கடந்திருக்கிறேன் என்று 
நின்று நிதானித்தபோது அறிகிறேன் 
ஆதலால் ஒற்றை மரமாய்த் தெரிகிறேன் 

தந்தையின்  மரணமும் 
தரணியெங்கும் கொரோணா அவலமும்
மனதின் வடுவாய் வருடிய போதும் 
மரணத்தீக்களின் சுவாலை
மனதில் கொழுந்துவிட்டெரிந்த போதும் 
எழுதத் துடித்தும் எழுதாது விரண்டிருந்தேன் 

என் வாழ்நாளில் அத்தனை சுமைகளும் 
எழுத்தும் நானுமாய் அமைதியாகியிருக்கிறேன் 
விட்டிருந்தவைகளை வடித்தெடுத்துவிட்டு 
நெருடலின் வருடல்களைக் கடந்திட 
தொடர்கிறேன் மீண்டும் என் பக்கத்துடன் 





நிர்ப்நதச் சிறைவாசத்தின் முதல் நாள் 


Sunday, May 24, 2020

சிறுநாளாகிய பெருநாள்


காரிருளில் அடர்ந்த காட்டில் 
கண்களைக் கட்டி விட்டதுபோல் 
தளர்ந்த மெய்யுடனும் 
சோர்ந்த உள்ளத்துடனும் 
கண்விழித்த நாளிது....!!

பூட்டிய அறையினுள் 
புத்தாடை  ஏதுமின்றி 
புத்துணர்வுக் குறைவுடன் 
உற்றார் உறவுகளற்று
 புலர்ந்து விட்ட நாளிது ...!!!

மரணப்பயத்தினால் 
அஸ்தமித்த உலகத்தில் 
எதிர்காலக் கேள்விக்குறிகளோடு 
நிகழ்காலக் கொலைகளாக்கிய
நிம்மதியற்ற நாளிது......!!

றகுமத்தான நோன்புகளை 
சுமந்து வந்த றமழானுக்கு 
விதியாக்கிய நடமுறைகளுடன்
வேதனைகளோடு விடைகொடுத்த 
வெறுமையான நாளிது.....!!!


என்றும்  குதூகலமாய் 
எல்லோருக்கும் சுபீட்சமாய் 
மலர்ந்து வந்த பெருநாளே 
என்றுமில்லா சாதனைகளோடு 
சிறுநாளாய் ஆனதேனோ......????

படைத்தவனிடமே மண்டியிடுவோம்  
அவனின்றி அணுவுமசையாது 
நடந்தவைகள் கடந்துவிட 
இனிவரும் நாட்களையாவது 
பெருநாளாய் மாற்றிடு இறைவா....!!

Thursday, May 21, 2020

உள்ளத்...தீ பிரளயமாகும்


மரணம் எய்திய மனிதர்களை 
மனிதமற்று எரித்து நீங்கள் 
சாதித்தது எதுவோ.....??
சரித்திரத்தில் சர்வாதிகளானீர்கள் 

உயிராகிய எங்களின் மார்க்கத்தினை 
உரமாக்கிய உங்களின் சுயநலத்தை
உலகமே உமிழ்கிறது இன்னுமா....???
உணரவில்லை உங்கிளின் புத்திகள் 

சுதந்திர நாட்டில் மதச் சுதந்திரத்தின் மறுப்பு 
அறம் விரும்பும் அப்பாவிகளை 
அல்லலலுறச்செய்து ஆட்டிவைக்கிறீர்கள் 
அருவருப்புகளால் அலறுகிறது உள்ளம் 

மானிடப்பிறவிக்கு மரணத்திலும் 
மாசுபடைத்து வாழும் மனிதர்ளுக்கும் 
தீயிட்டிருக்கிறீர்கள் கொழுந்துவிட்டெரிகிறது 
உள்ளத்....தீ பிரளயமாகினால் 
நாளைய நாசம் நிச்சயமாகிவிடும் .........

வல்லரசுகளே ஆட்டங்கண்டிருக்க 
பேரரசன் அல்லாஹ்வின் நாட்டத்தில் 
சிற்றரசர்களான உங்களின் ஆட்டம் 
நிறுத்தப்படும் நாள்வரும்....
ஆசுவாசத்தோடு காத்திருக்கிறோம்...

Wednesday, May 20, 2020

உன்னுள்ளும் நான்.......

என் உணர்விழந்து
உன் நினைவில்
எனைத் தொலைத்தேன்
உளம் ஏனோ தடுமாறுகிறது
காதலென்று மனம் சொல்ல
வயது என்று புத்தி உரைக்கிறது
இப் போரினை வெல்லவென்று
காதலம்பெய்துகிறேன்
உனை வீழ்த்த....
உன்னுள்ளும் நான்
உறைந்து கிடைக்கிறேன்
உருகும் நிலையற்று
மறைந்து கிடக்கிறேன்
மறந்து போகுமுன்
மலராய் ஏந்திடு என்னை
காதல் விதைப்பதோடு
கனியும் நாளுக்காய்
காதலியாய் கூட வர
காத்திருக்கிறேன் அன்பே..
விடை கொடு சீக்கிரமே....

Wednesday, April 15, 2020

எனை விட்டுப்பிரிந்த உயிர்

கண்கள் பனிக்கிறது
இதயம் வலிக்கிறது
இருண்ட உலகில்
தனிமையின் தவிப்போடு
நடைப்பிணமாய் இன்னும்
தந்தையின் பிரிவில்
தவிப்போடு நான்

கொரோனாவின் தாண்டவம்
உலகையே உலுக்கிக்கொண்டிருக்க
ஏப்ரல் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமை
வழமையான நாளாய் ஐக்கியமாகியிருக்க
வானலை வழி அழைப்பொலியோடு
அதிர்வலையாய் ஓலக்ககுரல்கள்
புரியாது நானும் உறைந்து போனேன்

என்னை உலகுக்கு ஈர்ந்தளித்தவரின்
அந்திம நொடிகளின் போராட்டம்
ஈற்றில் உலகம் விட்டகன்றார் என்றார்கள்
துரதேசத்து துண்டிப்புகளோடு
துவண்டிருந்த நான் துடித்தழுதேன்
துச்சமென்றானது என்னுயிரும்

ஆசுவாசம் கொண்டேன்
ஆறத்தழுவல்களற்று துவண்டேன்
என் தந்தைமுகம் காணது
சிந்திய கண்ணீரோடு
இறுதிக் கடமைகளுக்காய்
அறிவுறுத்தலளித்தேன்

மின்னலடித்தோய்ந்தது போலானது
சாலித் தண்டயலின் மகனென்பது
எனக்குப்பெருமை
அத்தனை பிரபலமம் என் தந்தை
ஊரார் முழுவதும் அவரின் உறவுகள்
ஆதலால் ஊரின் தலைமகன் போலனவர்

அவர் வழி முட்கள் கூட
விலகியதை கண்டிருக்கிறேன்
சாந்தமாய்ப் பழகுவதால்
ஏந்தலாய்த் திகழ்ந்திருக்கிறார்
ஏய்த்துப் பிழைக்காத உத்தம  உழைப்பாளி
குணத்தால் செல்வந்தன்
தகப்பனாய் எனது வழிகாட்டி

இறைவனின் படைப்பின்
விதிப்படி நடப்பவைகளை
ஏற்பவர்களாகிறோம்
அப்படித்தான் என் தந்தையின் மரணம்
இன்றய உலகத்து மரணங்களும் அப்படியே
எந்த நொடியிலும் நிகழக்கூடிய
எம் வாழ்வின் அந்திமம் மரணந்தான்

மரணத்தோடு மாறாத மனிதர்களை 
மனிதத்துவமற்ற மிருகங்களாய் காண்கிறேன்
என் தந்தையின் இருப்பில் மாறாதவை
அவர் மறைந்தும் மாறாதது ஏமாற்றமளிக்கிறது






Related Posts Plugin for WordPress, Blogger...