இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, January 9, 2017

ஆயுதம் தொலைத்தோம்


விழிகளில் முட்டும் கண்ணீருக்கு
விடைகள் கிட்டாத கேள்விகளுடன்
அரசியல் சாணக்கியங்களுடனான
அனாதைகளாய் எம் சமுகம்

அரசுகள் மாறிமாறி அரங்கேற்றும்
நாடகங்களில் ஒரே நடிகர்களானதில்
புளித்துப்போன வேசங்களைக் கண்டு
புளுங்கி நிற்கும் ரசிகர் பட்டாளங்கள்

இன்று நாளை விடிவு என்று - என்றுமே
இருளை மாத்திரங் கண்டு
இடிந்து போன இதயங்கள்
திசையறியாப் படகுகளாய் தத்தளிக்கிறது

கேட்ட உரைகளை மீண்டும் கேட்டு
பச்சோந்திகளின் பசப்பில் மயங்கி
தன் பாலகனின் எதிர்காலத்தையும்  மறந்த
தத்துணிவின்றிய கோழைகளாய் நாம்

எம் சமுகத்தின் காவலனான இளைஞன்
பேஸ்புக்கில் அரசியல் செய்கிறான்
சிந்தனைகளைச் சிதறச்செய்து
மந்தைகளாய் வலம் வருகிறான்

எழுவது எங்கிருந்தென்று தெரியாது
விழுந்து கிடக்கும் எம் சமுகத்தை
தூக்கிவிடப் புறப்படுங்கள்.......
தொலைந்த எம் ஆயுதம் எதுவென்று
தேடியெடுத்திட முனைந்திடுங்கள் 

கண்துடைப்புகளுக்குள் கட்டுண்டு
கண்கசக்கிக் காலில் வீழாது
கண்ணியத்துடன் தலைநிமிந்து வாழ
வழி செய்திடப் பாடுபடுங்கள் 

Saturday, December 24, 2016

தலைவர் ஹக்கீமை முனாபிக் என்கிறார்களே.....


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே........

நீண்ட இடைவெளியின் பின்னர் வெகு நாட்களாய் சமகாலத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற அட்டாளைச் சேனை தேசியப்பட்டியல் விடயம் பற்றிய எனது ஆதங்கத்தினை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். எம் சமுகம் சார்ந்து ஒரு விடயம் பேசப்படுகின்ற போது அது சம்பந்தமான குறைநிறைகளை ஆய்ந்தறிந்து சரியான விடயங்களை மாத்திரம் கருத்துகளாக பதிவேற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக அமையும். இதை அனைவரும் பின்பற்றுவோமானால் எம் ஊரின் மானமும் எம் சமுகத்தின் ஒழுக்கமும் பேணப்படும் என்பதில் ஐயமில்லை, இதை தயவு செய்து தற்கால இளம் எழுத்தாளர்களும் சமுக வலையத்தளங்களை பாவிப்பவர்களும் பின்பற்றுமாறு அன்பான வேண்டுகோளை முதலில் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த தேர்தல் காலத்து அட்டாளைச் சேனையில் தபால் நிலையத்துக்கு அருகாமையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தலைவர் ஹக்கீமால் பேசப்பட்ட தேசியல் பட்டியில் விடயம் இன்று பேசு பொருளாகி அனைவர் மத்தியிலும் சலசலப்பினை ஏற்படுத்திவிட்டிருக்கிறது அந்த மேடையில் தலைவர் வாக்குறி அளித்தபோது “அல்லாஹ் அக்பர்” என்று ஆரவாரப்பட்ட ஆயிரக்கணக்கானோர்களின் மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன் இது சம்பந்தமாக இது நாள்வரை தலைவராலோ உயர்பீட உறுப்பினர்களாலோ எந்தவித முடிவுகளும் அறிவிக்கப்படாத போது பலரும் அவரவர் பாணியில் சமுக வலையத்தளங்களில் கருத்துப் பரிமாற்றங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இதை அனைவரும் பார்த்தும் கேட்டும் கண்டு கொள்ளாது அதன்போக்கில் விடபப்பட்டடிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற மிகப்பெரிய சக்கி இன்று பலம் குன்றிய ஒரு விடயமாக மறைவிலும் வெளிப்படையாகவும் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கிறோம் அதற்கான சான்றாக தலைவருக்கு எதிரான விவாதங்கள் மற்றும் அனைத்து ஊர்களிலும் எழுகின்ற எதிர்ப்பலைகளைக் கவனிக்கின்ற போது புரிந்து கொள்ளலாம் அடிப்படைப் போராளிகள் கூட வெறுத்தொதுக்கின்ற நிலையினை அவதானிக்க முடிகிறது காலம் பதில் சொல்லுமென்று காத்திருந்தவர்கள் கூட கைவிடும் நிலை உருவாகிவிட்டது
மாற்றான் எம் தலைவருக்கும் கட்சிக்கும் ஏசியபோது எழுத்திலும் நேரடியான எதிர்ப்பிலும் வாதடிய என்னைப்போன்ற போராளிகள் கூட தற்போது மௌனிக்கும் நிலைக்கு சமகால நடவெடிக்கைகள்  அழைத்துச்செல்கிறது

அட்டாளைச் சேனை விடயத்தில் என்னைப் போன்றவர்களின் பார்வை என்னவனில் தலைவரால் யாருக்கு தேசியப்பட்டியில் கொடுத்தாலும் அதில் எந்தவித நன்மையையும் நாங்கள் அடையப்போவதில்லை இவ்வாறான பகிரங்கமான வாக்குறிதிகள் கூட மறுக்கப்படுகிறதே என்பதுதான் மனங்களில் அசைபோடப்படுகின்ற விடயமாக இருக்கிறது இந்த நிலையிலும் எந்த முடிவுக்கும் யாரும் வந்துவிட முடியாது இன்னும் காலமிருக்கிறது தலைவருக்கான நெருக்கடிகள் பல ரூபத்தில் இருக்கும் என்பதைக் கூட அறிந்தவர்கள் நாங்கள் மிக விரைவில் இதற்கான தீர்வினை முன்வைத்து இந்த விடயத்திற்கு முற்றுப் புள்ளியிடுங்கள் என்பது மட்டுமே எங்களது வேண்டு கோள். அது மாத்திரமல்லாது இப்போது இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள் வெறுப்புகளைக் கழைந்து ஒற்றுமை நோக்கிய பயணத்தினை இனியாவது ஆரம்பியுங்கள் இல்லையென்றால் எதிர்காலம் இருள்மயமாகும் என்பது உறுதி செய்யப்படும் தயவு செய்து சிந்தியுங்கள் 

முனாபிக்கென்று தூற்றுகின்ற சகோதரங்களே இது நாள்வரை பொறுமையுடன் இருந்து விட்டோம் இனியும் இருந்து பார்ப்போம் எமது மார்க்கம் கற்றுத்தந்த சகிப்புத்தன்மையினை கடைப்பிடிப்போம் இறைவனின் நாட்டம் எதுவோ அதுவே எமக்கு நடந்தேறும் அனைத்தும் சமநிலைபெற்று எம் சமுகத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் வீண்ணான வார்தைப்பிரயோகங்களை சமுக வலையத்தளங்களில் பாவிக்காதீர்கள் நாம் அனைத்திலும் ஒழுக்கமானவர்கள் என்பதை உறுதி செய்யுங்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருங்கள் எமது ஒவ்வொரு விடயமும் நன்மைகளாக அமைந்து நாளை இறைவனின் சன்னிதானத்தில் உயர்ந்தவர்களாவோம் 

இறைவன் எமது எண்ணங்களையும் செயல்களையும் நன்மையுடயதாக மாற்றுவானாக ...........ஆமீன் ஆமீன் 

நேசமுடன் ஹாசீம்  

Saturday, October 29, 2016

எப்போது உணர்வாய்......


நித்தம் உன் சித்திரவதையில்
செத்துவிடத் தோன்றுதடி....
சித்தம் உன் காலடியிலான என்னை
பித்தமென்று உதறுகிறாய்

நிகள்வுகளின் நிளல்களில்
நிஜங்களையல்வா தொலைக்கிறாய்
சத்தியம் உணர மறுத்து
சலனங்களை ஏற்படுத்துகிறாய்

சந்தேகப் பேய் உன்னுள்
மெத்தையிட்டு உறங்குகிறது
தாலாட்டுப் பாடியதை உன்மடியில்
தங்கவைத்திருக்கிறாய்....

உன் நியாயப் பார்வைக்குள்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வித்தியாசம் தெரியவில்லை - ஆதலால்
தீயொன்றை மூட்டிக்கொண்டிருக்கிறாய்

 நீ உன் உண்மைக் காதலால்
கட்டிவைத்திருக்கின்ற
வாழ்கை என்னும் அழகிய மாளிகையை
உன் கைகொண்டு எரிக்க ஆரம்பித்திருக்கிறாய்

கற்பனையில் செய்யாத குற்றங்களை
என் மீது சுமத்திச் சிறைவைக்கிறாய்
உன் தண்டனைக்குள் அகப்பட்டுவிட்ட என்னை
இழந்த பின்னர் உன் தவறில் உணர்வாய்

Monday, July 18, 2016

கடலோரத்து மணலுக்கான எனது வாழ்த்து.......

கவிஞர்களை ஈன்றெடுத்த பாலமுனை
என்றோ உன்னையும் கவிஞனாய் ஈன்றிருந்தது
தனித்துவப் புலமையாய் உன் பரிணாமத்தால்
எம் தாய் மண்ணுக்கு என்றும் பெருமிதமே

நாம் கற்றிருந்தது ஒரே பாசறையானாலும்
எமை இரு வேறு திசைகளில் பயணிக்கச்செய்த
விதியின் சதுரங்கத்தில் கவித்துவம் என்னும்
ஒரு பாதை எமை மகிழ்வித்திருக்கிறது தோழா.....

தட்டுத்தடுமாறிய வாழ்வில் துணிந்து திசைதேடி
முனைந்து முத்தெடுத்து இன்று உன் சொத்தாய்
கடலோரத்து மணலைக் கையிலேந்தி நிற்கிறாய்
இக்காலத்தின் வெற்றியாளன்நீ வாழ்க வாழ்க!

இம் மணலின் அருமை போற்றிட
தமிழ் அறிஞர்கள் கூடிநிற்கும் வேளையில்
எமைப் படித்திடும் உள்ளங்களுக்கும் மகிழ்வுதர
என் மன முற்றத்தில் உண் மணலைத் தூவியிருக்கிறேன்

நல்லதோர் சமுகம் நோக்கிய படைப்பாளியாய்
சுமைகளேந்திய சொற்களால் செப்பனிட்டு
சமுகக் குறைகளாய்ந்திடும் கவிதைகளை
தன்னகத்தே கொண்ட மணலை மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்

சொற்ப வாழ்நாளில் சுடர்விடும் நன்னறங்களாய்
காலத்தால் அழியாத தமிழ்த்தொண்டாய்
இலக்கியப் பாதையில் விளக்கவுரைகளாய்
உம் படைப்புகளும் பதிவாகிட மனதாற வாழ்த்துகிறேன்

அனைவரும் கூடிக் குலாவும் கடலோரத்து மணல்போல்
அனைவர் மனதையும் கொள்ளைகொண்டதாய் அமைந்த
உன்னால் உருவாக்கிய இம் மணல் மீதும்
கலந்து மகிழும் சான்றோரையும் போற்றி வாழ்த்துகிறேன்.
நன்றிகள்.நண்பன் முஹாவின் கவிதை நூலுக்கான என் வாழ்த்து என்றோ எழுதி சேமித்திருந்தேன் தமதமாய் பிரசுரித்தாலும் உள்ளத்தின் வெளிப்பாடு என்றும் உண்மையாய் அமைந்திருக்கிறது என்பது திண்ணம். நன்றிகள்

Wednesday, June 8, 2016

வந்ததெம் றமழான்......!!!


பசித்திருந்து தாகித்திருந்து 
பகலிரவாய் பிரார்த்தித்து 
நோன்பு நோற்று நன்மை பெற்று 
சுவனத்து வாயல்களடைந்திட 
வந்ததெமக்கு றமழான் 

நாட்களின் நகர்வுகளோடு 
வந்தவாறு செல்கிறது 
வரவுகளெமக்கு எதுவானது 
முடியுமுன் முனைந்து 
அடைந்திடுங்கள் வெகுமதிகளை 

வேலைப்பளுவின் சுமையும் 
வேதனைதரும் வெயிலும் 
சோதனைகளாய் அமைந்து 
றமழானோடு யுத்தமாக்கி
தியாகிகளாய் வடிவமைத்திருக்கிறது 

தனிமையின் துயரும் 
தயவுகளின் கோர்வைகளும் 
இத்தரணி வெறுக்கச்செய்கிறது 
பிறப்பில் நல்மாந்தராகி 
இறப்பிலாவது சுவனமெய்திடனும் 

வரம் தரும் றமாழானில் 
வளம் தர இறைவனை வேண்டி 
வறியதெம் வாழ்வகற்றி 
வெற்றியாளர்களாய் அவன் முன்னில் 
ஒன்று சேர்வோம் நாளை மறுமையில் 

Tuesday, May 24, 2016

உமை மாற்றாத அனர்த்தம்


உணர்வால் உயர்ந்தவன் 
கொடையால் மகிழ்ந்தவன் 
கோடிகோடியாய் கொட்டித்தர 
ஏழனம் செய்கிறான்  உலோபி 

பதுக்கலில் பலசாலியாய் 
சுறண்டலில் புத்திசாலியாய் இருந்தவன்
கொடுத்தல் கண்டு பொறாமை கொண்டு 
கொச்சைப்படுத்தும் வாதம் கொள்கிறான் 

கண்டாயா உன் கண்முன்னே 
இவ்வுலகமது நிச்சயமற்றது 
நின் வாழ்க்கையதுவும் நிரந்தரமற்றது 
நல்லறம் நோக்கி நீ வாழப்பழகிடு 

செல்வமென்று சுகங்கண்டு 
சுற்றத்து அனர்த்தமும் உமை 
மாற்றவில்லை மனிதனாய் 
உயிர் சிக்கும் வரை காத்திருக்கிறாயா??

எண்ணங்களையும் அறிந்திடும் இறைவன் 
கேள்விகளோடுன்னை காத்திருக்கிறான் 
எதிர்பார்ப்பற்ற உதவிகளோடு மட்டும் 
உயரிய சுவர்க்கம் அடைந்திடு 

ஜனனமும் மரணமும் 
இறைவனின் தீர்ப்பில் நிகழ்வது 
இடைப்பட்ட வாழ்வு மட்டும் 
எம் விதியின் எழுதுகோல்கள் - உடனே
எது வென்று எழுதிவிடு   

Thursday, May 19, 2016

காத்திடு எங்கள் தேசத்தை


அனர்த்தங்களின் அழிவுகளால் 
பாமரர்களின் பரிதவிப்புகள் 
வல்லவனே யா அல்லாஹ் 
காத்திடு எங்கள் தேசத்தை 

சக்தியற்ற இம் மானிடனுக்கு 
உன் சிறு அசைவும் பேரிடியாகும் 
இயற்கையைப் படைத்த உன்னால் 
இயக்கங்களையும் நிறுத்திட முடியும் 

உன் நினைவின்றித் துதிமறந்து 
தன் கடமை மறக்கின்ற மாந்தருக்கு 
ஆங்காங்கு நினைவூட்டி - நீ
இருக்கிறாய் என்பதை உணர்த்துகிறாய் 

உணர மறுக்கும் மனிதனோ 
தான் வாழ்ந்தால் போதுமென்று 
தூங்குவதாய் துயில்கொள்கிறான் 
தனக்கும் நாளை உண்டென மறந்தவனும் 
கேளிக்கைகளோடு நடனமாடுகிறான் 

அருளாளனே யாரப்பே 
இம் மனிதர்களை மன்னித்தருள்வாயாக 
உன் தயவின்றி எதுவுமில்லை 
உன்னிடமே மண்டியிட்டுக் கேட்கிறோம் 
காத்திடு எங்கள் தேசத்தை 

Related Posts Plugin for WordPress, Blogger...