இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, December 31, 2015

நகரும் நாட்கள்.........


மாற்றங்களில்லா நாட்களோடு  
மகிழ்வுகளில்லா வாழ்க்கையுடன் 
மனங்களிங்கு தவிக்கிறது 
மனிதமில்லா மனிதர்களோடு 

முதலாளித்துவம் முதன்மையாகி 
சுறண்டல்கள் சாதாரணமாகி 
நெருடல்களின் கவலையில் 
இழந்தவைகள் அதிகமாதிகம் 

விலைபோன இளமையும் 
எதிர்கொள்ளும் முதுமையும் 
விதி செய்த கோலங்களென்று 
வேடிக்கைகள் வாழ்விலென்றும் 

நாளையிலும் இன்றிலும் 
நமக்கெங்கே மாற்றமென்று 
என்னாளும் ஒன்றாய்க் கண்டு 
மகிழ்வதற்கும் மனமில்லை இன்று 

கடந்தவைகளை மற்நதவைகளாக்கி
பிறப்பவைகளை  மாற்றங்களாக்கி 
சுபீட்சங்களை  வாழ்விலேற்று 
சுகங்காண வகைசெய்திடுவாயாக.....!

Saturday, December 26, 2015

சுனாமி உலவுகிறது இன்றும்........


பல்லாயிரம் வருடங்களில் 
ஓரலையாய் வந்து 
பேரலையாம் சுனாமியாய் 
இன்றும் நினைவலைகள் தொடர்கிறது 

அமைதிக் கடலனப்போற்றி 
அன்னை மடி அன்னம் தேடிய 
ஆயிரமாயிரம் உயிர்களை 
இழந்த நாள் மறந்திடுமா  

இறைவன் எழுதிய தீர்ப்பு அது 
அறிந்திடாத காரணி எது 
வல்லவன் வழி மறப்பை 
உணர்த்திவிட்ட நிகள்வுதானோ......

நெஞ்சங்கள் பதைத்திருந்தது 
நெடு நாட்கள் உண்ண மறுத்து 
நித்தமும் நடு நடுங்கி 
அங்குமிங்கும் சுனாமியென 
கனவிலும் ஓடிய நாட்களாகியது 

வடுக்கள் தடங்களாகி 
அதன் எச்சங்கள் மிச்சமாகி 
எத்தனை உயிர்கள் மந்தமாய் 
மகிழ்வின்றித் துவண்டர்கள் 

காலத்தின் வேகம் கடத்தியது வருடங்களை 
கட்டளைகள் மறந்த அதே மானிடங்கள் 
அனியாயங்களின் உச்சியில் 
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள் 

பாத்திருக்கிறான் இறைவன் 
பகுத்தறிவு மனிதன் திருந்துவானென்று 
உணர்த்தும் வடிவம் எச்சுனாமி என 
அவனையன்றி யாரறிவார்

ஆகு என்றாலாகிவிட - அவன் 
கட்டளைக்காய் காத்திருக்கிறது பிரபஞ்சம் 
ஆகு நீ மனிதமாய் என 
சிறுசிறு சுனாமிகள் உலவுகின்றது இன்றும் 


qatar : 1:20am

Wednesday, December 23, 2015

உளமிங்கு அழுகிறது........

கறுத்த பையன் 
கருநாவப் பழங்கொண்டு 
கருவிழிப் பார்வையில் 
கருத்துகள் பல சொல்லுகிறான் 

வெயில் காலமிது 
வியர்க்கிறது தேகம் 
வண்டியெதையும் காணவில்லை 
வாங்கிடத்தான் யாருமில்லை 

அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி 
வள்ளியம்மாள் காத்திருப்பாள் 
வெறும் பானை சட்டிகளோடு 

கற்றுத்தேறும் வயசெனக்கு 
கல்விக் கூடம் செல்லவில்லை 
விதிசெய்த விளையாட்டில் 
வியாபாரியாகிவிட்டேன் 

விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய் 
விலைபோகிறது இளமையுந்தான் 
வீதியோரத்து அவலமாகி 
விடைதேடுகிறேன் விடியலுக்காய் 

உயிராய்ப் பிறந்ததையிட்டு 
உளமிங்கு அழுகிறது 
விலைமட்டும் பேசாதீர்கள் 
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள் 

குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்

Monday, December 21, 2015

புதிய இலங்கையுன்னால்........




பல்லாயிரம் வருட வரலாற்றில் 
இலங்கைத் தலைவர்களுள் உன் அவதாரம் 
இன்று யாழ் மண்ணில் உன் வரவு கண்டு 
உண்மை உணர்வுகளுடன் மெய்ச்சிலிர்க்கிறது 

வாய்ப் பேச்சு அரசியல் வாதிகளின் வாயடைத்து 
உண்மை அரசியல் வழி எதுவென்றுணர்த்தி
வறியவர்களின் வாய் மொழி கேட்டு 
புத்துணரச்சியும் வழங்கி நிற்கின்றாய்  

வாக்கிடும் காலம் மட்டும் வாதங்கள் செய்து 
வெற்றியாளர்களாய் மகுடம் சூடிவிட்டு 
வறியவன் பிச்சையில் அரியாசனமேறி 
வந்த வழி மறந்த சல்லாப வாழ்வவர்களுக்கு 

மக்களறியா மொழிச்சொற்களானாலும் 
மகிழ்வு தரும் மென்மை கொண்டு 
அன்னியோன்யமாய் அரவணைத்து 
பாசப் பரிமாற்றத்தில் மனசிங்கு அழுகிறது 
ஆனந்தக் கண்ணீர்களோடு 

எத்தனை தலைமைகள் ஆண்டிருந்தும் 
அதே ஆண்டியாய் வாழ்க்கை 
உன் காலடித் தடம் கண்டு 
யாழ் அன்னையும் அழுகிறாள் மகிழ்ந்து 

என்ன செய்தாயோ எதைச் செய்வாயோ 
நீயே உனக்கு அத்தாட்சி 
உன் வருகையில் வரம் கிடைத்திட்டதாய் 
வளரும் குழந்தையும் மகிழ்கிறதிங்கு 

அடித்தவனே அணைக்கிறானென்று 
திரும்பியுனைப் பார்க்கிறது உலகம் 
தீண்டாதோரும் திகைத்திடுமளவு 
தீர்வுகளைத் தொடர்ந்திடு மகிழ்ந்து 

அஷ்தமனக் காலங்களோடு 
அழுது புரண்ட நாட்கள் மறக்க 
அன்னையாய் உச்சிமோர்ந்து 
அகம் நிறைந்த அபிவிருத்திகளைத் தந்துவிடு 

புதியதோர் உலகம் படைக்க 
புத்துணர்வும் உன்னால் பிறந்திருக்கிறது 
புதுமைப் புரட்சியமைத்து 
புதிய தலைவனாய் தொடர்ந்திடு 
புதிய இலங்கையையும் அமைந்திடும் 

Saturday, December 19, 2015

இரண்டாம் உயிருக்கொரு வாழ்த்து


கவிஞர்களின் மன்றில்
கவிதைகளின் அலங்காரங்கள்
வார்தைகளின் ஜாலங்களால்
கோலமிடுகிறோம் கவிதைகளாய்

உனக்கென என் உள்ளத்தில்
கவி வரிகளாய்த்தான் ஊற்றெடுக்கிறது
வாழ்த்தவொரு சந்தர்ப்பமெனக்கொண்டு
வரிகளமைக்கிறேன் வாழ்க வென்று

பாலமுனைக் கவித்தாய் பெற்றெடுத்த
இளவல் நீ என்று மகிழ்கிறாளெம்தாய்
உனை ஈன்றதாயின் இறுமாப்பில்
உணர்வுகளும் அஸ்தமித்திருக்கும்
நலமாய் வாழ “அமீர் மூமினையும்” வாழ்த்துகிறேன்

சிந்தும் உன் சிந்தனைகளை
செதுக்கியதால் கவிதைக் கருவேற்று
இன்று “இரண்டாம் உயிர்” என்று
கையில் குழந்தையாய் பிரசவித்திருக்கிறாய்

நீ யாகிய முதலாம் உயிர்
ஈன்றிருக்கும் கவிதைகளின் தொகுப்பை
மற்றொரு உயிராய்க் கொண்டிருப்பாய் போலும்
இவ்வுயிரும்  பேறுகளைடைந்திட வாழ்த்துகிறேன்

பாலமுனை பாறுக் ஆசுகவி அன்புடீன் - என
முத்தாய் எம் முன்னோடிகளின் வழியில்
பல கவிச் செல்வங்களின் சேமிப்பில்
சொத்தாய் சேர்கிறாய் நீயும்  - வாழ்க பல்லாண்டு

கல்வி உணர்வாளனாய் உம்பயணத்தில்
கவிதை எனும் ஆயுதமுன் கையில்
எம் சமுகத்துக் களை பிடுங்க
கூர்மையாக்கிடு உன் கவிதைகளை 

பாலமுனை பஸ்மில் என்றிருந்தாய் 
இன்று பாவலர் பஸ்மிலாய் உன் அவதாரம் 
கவியுலகில் என்றும் புலவராய்த் திகள 
பெருமையுடன் வாழ்த்துகிறேன் 

நீ செல்லும் பாதையில் 
நானும் இருக்கிறேனென்று மகிழ்கிறேன் 
உன்பாதையில் என்றும் வெற்றிகளை 
இறைவன் தந்திட இருகரமேந்துகிறேன் 
வாழ்க வாழ்க ஈருலக வெற்றியோடு வாழ்க 

Wednesday, December 16, 2015

நிம்மதி வேண்டும் ...??


நிம்மதி தொலைத்து நிம்மதி தேடும் 
நிர்க்கதியற்ற மானிடனே - நீ 
நின்று நிதானித்து நிமிர்ந்து பார் 
நின் நிம்மதி உன்னை கேலி செய்யும் 

ஆசைக்கு அடிபணிந்து 
பேராசையுடன் போர்தொடுத்து 
சொற்ப வாழ்நாள் உனதென்று மறந்து 
அற்ப சுகங்களுக்காய் அலைகிறாய் 


கொடை வெறுக்கும் கருமியாய் 
கண்மூடிய மானிடனாய் 
நாளைக்காய்  சேர்த்து வைத்து 
இன்றய நிம்மதிக்குத் தீ இடுகிறாய் 

இம்மியளவும் இறைவனை மறந்து
அவன் வழி நிம்மதி மறுத்து 
படைப்புகளுக்கே அடிமையாகி 
பாரிதவிக்கிறாய் நிம்மதிக்காய் 

குழந்தையாய் நீ இருந்தபோது 
அடைந்திருந்த நிம்மதி போல்  
குழந்தை மனங்கொண்டு 
அனைத்தையும் ஆண்டு பார் 
நிம்மதி உன்னிடமே சரணடைந்திடும் 

Thursday, December 3, 2015

தோல்விகண்டு வெற்றிகொள்


தோல்வி கண்டு துவண்டிடாதே 
வெற்றி நோக்கி வெருண்டு எழு 
எதனால் தோல்வியென்று கண்டு 
துடைத்தெறிந்திடு வெற்றிக்காய் 

தோல்வியால் அச்சங்கொண்டு 
வெற்றியைத் தூரமாக்கி 
தோல்விக்கே இன்னும் உரமூட்டி
தோற்றிடாதே உன் வாழ்வில் 

சுற்றார் கூற்றில் சுறுண்டு 
சுவர்களுக்குள் சிக்குண்டு 
சிதைத்திடாதே உன்னை 
சினங்கொண்டெளு -உன்
சீற்றம் வெற்றிகளைத் தேடித்தரும் 

உற்றார் உனக்கு ஊட்டிடும் 
உண்மையான உரைகளை ஏற்று 
சுற்றும் முற்றும் உற்றுப்பார் 
உன்னருகில் காண்பாய் வெற்றிகளை 

எத்தனை முறை வீழ்ந்திருப்பாய் 
உன் தத்திமித்தும் பருவத்தில் 
எழுந்திராவிட்டால் நடந்திருப்பீரா இன்று 
உனைத் தூக்கிவிட நாங்களுண்டு 
எழுந்துநட வெற்றி நோக்கி 

வயதுகள் உனைக் கடந்து செல்லும் 
விடுபட்டவைகள் மீண்டும் திரும்பிடாது  
நாளைய வயது  உன் தவறுணர்த்துமுன் 
இன்றய வயதின் தேவைகளை அகற்றிடு....

தோற்றாயென்று தூற்றுவோருக்கு 
வென்றாயென்று வெதும்பிட 
வகுத்து நட உன்வழியில் - நாளை 
என் வீரத்தாய் நீயாவாய் 




Related Posts Plugin for WordPress, Blogger...