இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 21, 2013

உன்னுயிர் மாய்க்க நீயார் ????


வாழப்பிறந்த வாலிபனே - உன் 
வாழ்வை முடித்திட நீ யார் ???
உனக்கே உரிமையற்ற உயிரை 
உலகிலிருந்து அகற்றிட நீ  யார் ???

பசுமை நிறைந்த வாலிபத்தினை 
பண்போடு நடத்தாத அற்ப கோழையாய் 
சிறுதுரும்புத் தோல்விகளுக்கும் 
சிதைக்கிறாய் உன்னுயிரை 

காதல் தோல்வியாம் 
கடன்காரன் தொல்லையாம் 
வாழப்பிடிக்கவில்லை என்று 
பித்தனாய் உயிர் மாய்க்கிறாய் 

எதிர்கொள்ள நாதியற்ற 
எழியவனே மனிதா 
உன் புத்தியால் சாதித்திடாத 
பகுத்தறிவை ஏன் மறந்தாய் 

Saturday, October 19, 2013

வழிவிடு என் சமூகத்திற்கு........

எத்தனை வாலிபர்களின்
வயதுகளிலும் குருதிகளிலும்
செய்துவைத்த பஞ்சணையில்
இன்னும் துயில்கொள்ளும் - எம்
தலைவர்கள் இன்னுந்தான்
உறங்குகிறார்கள்

சமூகப் பற்றென்று பாசாங்கு செய்து
வென்றதினால் வாழ்வுபெற்ற
நடிகர்கள் கூட்டம் அடுத்த
நாடக மேடைவரை காத்திருக்கிறார்கள்

அன்றய எம் சமுகத்தின் ஒற்றுமையை
உதாரணமாய்க்கொண்டு இன்று
வடக்கு சமூகத்தவன் சாதித்திருக்கிறான்
கிழக்கைக் கூறுபோட்டு விற்றவர்கள்
நாணித்து நாதியற்றவராகினரே.....

நாலாதிசையிலும் அடிபடும்
அவமானச் சமூகமாய் மாற்றப்பட்டு
அல்லோல கல்லோலப்படும்
தன் சமூகத்தை வழிநாடாத்தத் தகுதியற்ற
அரசியல் அசுரர்களாய் மட்டும்
அரண்மணையில் வீற்றிருக்கின்றனர்

உமிழவும் விழுங்கவும் முடியாத முட்களாய்
பொறியொன்றில் அகப்ப்பட்ட மானாய்
தன் பொன்னான காலத்தை
இன்று சமுகத்தின் சிதைவுக்காய்
தாரைவார்க்கும் தன்னலத் தலைமைகளின்
பின்னே விடிவுக்காய் காத்திருக்கிறது சமூகம்

அபிவிருத்தி வேண்டாமென்று
ஆயுள்வரை சமூகப்பற்றோடு வாழ்ந்தவன்
ஒட்டாண்டியாய் இன்னும்
வாழ்வுக்கு வழிதேடுகிறான்
நீயொரு தலைவனாய்
என்ன கைமாறு செய்தாய்

வேண்டாமையா வேண்டாம்
உம் தயவெதுவும் வேண்டாம்
நாளைய என் சமூகத்தின் எழுச்சிக்காய்
இன்று நீ வழிவிட்டுப்பார்
வீணர்களெல்லாம் வியர்த்து நிற்பர் 
வீறுகொண்டெழுந்து விண்ணைத்தொடும்

Wednesday, October 9, 2013

வெற்றியாளனை வாழ்த்துகிறேன்.....


வென்றுவிட்ட என் தோழனுக்கு 
வாழ்த்தெழுதத் துடிக்கிறதென்மனம் 
வரிகளையும் அவனிடமே 
வாங்கிடுமளவு கவிஞனுமவன் 

நான் பிறந்த மண்ணில் 
மலர்ந்த ஒரு கவிக்குயில் 
இன்று ஜனாதிபதி விருதடைந்த 
பெருமைக்குரிய ஆசான் 

பல்லாயிரம் மைல்களெம்மை 
வகுத்துநின்று பல குறிகள் சொல்கிறது 
ஆறாத எம் நட்பினால் 
மகிழ்கிறதென்னுள்ளம் 

தேசங்கள் கடந்து நான் 
தேடிய வாழ்க்கையினை 
எம் தேசத்தினுள் வாழ்ந்து 
வென்றுவிட்ட வெற்றியாளன் நீ 

Thursday, August 22, 2013

உணரும் குழந்தை உதித்திடட்டும்......


நீ என்னுயிரைச் சுமந்து 
பிரசவிக்கும் தருணத்திற்காய் 
காத்திருக்கும் பொழுது உன்னில் 
என் தாயின் வலி தெரிகிறது 
சகித்திட மனம் தவிக்கிறது....

ஒவ்வொரு நொடியும் 
உயிர்த்தெழும் வலியால் 
அவதிகொள்ளும் தாய் நீ 
பிள்ளையாய் நானும் இன்று 
உணர்கிறேன் கண்டு.....

குழந்தைகள் உணராத வலி 
அம்மாக்களுக்கான விதியானதில் 
உதாசீனமின்று சாதாரணமானது 
உன்னதத் தாய்க்கு ஈடுயிணை 
எம் உயிர்கொடுத்திடினும் தகுமா??

பிறப்பென்னும் பெயரில் 
பார்(உலகம்) உயிர்பெறுகிறது 
சிசுவை ஈண்றெடுத்திடத் தாய் 
அவளுயிரை பணயம் வைக்கிறாள் 
உணரும் குழந்தைகள் மட்டும் 
உலகில் பிறந்திடட்டும்....

உத்தமத்தாயின் உணர்வுகளை 
உயிருள்ளவரை மதித்திடல் வேண்டும் 
மதிக்கத் தவறும் மானிடங்களோ.. 
மரணித்தல் மேலாகிவிடும் 

Wednesday, August 7, 2013

பாலைவனத்துப் பெருநாட்கள்.....


மலரும் வருடங்களை 
மகிழ்விக்க வரும் 
திருநாட்களில் பெருநாட்கள் 
எம் அருட்கொடைகள்.

பசித்திருந்து தாகித்திருந்து 
நோன்பு நோற்றோருக்கு 
வெகுமதியாய் மலரந்து 
மகிழ்விக்கிறது இன்நாள் 

உறவுகள் பிரிந்து 
பல துறவுகள் கடந்த 
தனிமை வாழ்வில் 
தாகமதிகம் இன்நாளில் 

எத்தனை பெருநாட்கள் 
இதுநாள் வரை கடந்தும் 
தனிமையில் கிடந்த நாட்கள் 
வெறுமையில் முடிந்தன 

நாளையும் மலர்கிறது 
நன்நாளாய் ஒரு பெருநாள் - ஆனால் 
பாலைவனத்துப் பெருநாட்கள் 
பாலைவனங்களாய் எம் வாழ்வில் 

தேசங்கள் கடந்து பாசங்கள் தேடும் 
தவிப்போடுள்ள பெருநாட்களை 
தரமுள்ளதாய் மாற்றிட..... 
வல்லோன் துணை அனைவருக்குமாய் 
கிடைத்திட பிரார்த்திக்கிறேன். 

Monday, July 1, 2013

(06)ஆறுகிறதென் மனம்.....


வருடத்திலெருமுறை உனக்காக 
உதிர்கின்ற என் வரிகளில் 
தொக்கி நிற்கின்றவைகள் 
தொடர்கின்றன இன்றும் .....

அறியா உன் பருவத்தில் - நான் 
அமுதமாய் ஒதிய வரிகளை - இன்று 
படியென்று கூறிப் பகலிரவாய் 
ஆனந்தம் கொள்கிறாய் 

அன்று எழுதியவைகள் - உனக்கு 
இன்று அகம் மகிழ்விப்பதுபோல் 
இனிமேல் ஏற்றுபவைகளும் - உன் 
வழியில் விளக்காய் மாறிடட்டும் 

உன் சுட்டிக் குறும்புகளுக்கு 
சுருக்கிடும் காலமிது - நீ
குமரியாய் ஆனாலும் - என் 
சுட்டிக் குழந்தை நீயல்லவா....

உன் பிரிவில் நானடைந்த 
துயர்களுக்கு நிகர் தேடுகிறேன் 
உன் வயதுகள் மாத்திரம் 
என்னை வக்கிரமாய் கர்ச்சிக்கிறது 

Sunday, June 16, 2013

நானுமோர் குழந்தைதந்தைக்கென்றொரு தினம் 
கொண்டாடுகிறதொரு உலகம் 
என்னுலகில் நான்... காணாத தந்தைக்கு 
கொண்டாடுவதால் என்ன பயன் 

அப்பாவி ஒரு பெண் தப்பாகி 
வம்பாக ஒரு பேறுகண்டு 
ஈன்றுவிட்டாள் இரக்கமின்றி 
மறந்துவிட்டாள் என் தந்தையினை 

கைவிரல் பிடித்து கதைகள் பல பேசி 
விளையாட்டு பொம்மைகளும் 
வீரவசனக் கதைகள் என 
தந்தைவழிப் பாசமெனக்கு 
சித்திரத்தில் கண்டதுண்டு 

என் சரித்திரத்தில் தேடுகிறேன் 
தந்தையாக வாசமெனக்கு 
தந்தவர்கள் யாருமில்லை 
தரித்திரனாம் தரணியில் 
நானுமோர் குழந்தை

Wednesday, June 5, 2013

என்னுள் ஒரு காதல்


காதல் காதலென்று
இதயம் துடிதுடிக்கிறது அதில்
உன் நினைவும் ஒருசேர
காதலிங்கே உயிர்பெறுகிறது

உன்னுள் இல்லாத காதலை
என்னுள் விதைத்த நீ
காதலுக்கே சமாதிகட்டுவதுபோல்
உன் காதலை ஏன் மறைத்துவிட்டாய்

உன்னைக் காணும் போதெல்லாம் 
உள்ளம் ஒரு நிலையில் இல்லையெடி 
கண்ட மாத்திரத்தில் கட்டியுனை 
கடத்திடத் துடிக்கிறதென் மனம் 

கவலையின்றிக் காரமின்றி 
காதலற்ற பாசமென்று 
பதட்டமின்றிக் கூறிச்சென்றாய் 
பரிதாபமாய் என் காதலை - உனக்காகப் 
பாசமாக்கிக் கொண்டேன் 

Sunday, May 12, 2013

அழுகையின்றி அழுகிறேன்


விட்டுச்சென்றாய் விதியின் வழியே
விடியும் வரை உறக்கமில்லை - என்
விழிகளிலும் ஈரமின்றி - வாழ்வின்
விடியலுக்காய் காத்திருக்கிறேன்

விண்ணில் உலாவந்த
விடிவெள்ளியாய் ஆனதினால்
விட்டில் பூசியாய் என் வாழ்வில் நீ
விதியின் வரைவில் வீழ்ந்தது நான்

விம்பமாய் காண்பித்த வாழ்வில்
வியந்துநான் ஐக்கியமாகியிருந்தேன்
விடுபட்ட இடைவெளிகள்
விடைகளற்றுத் தேங்கிக்கிடக்கிறது

விஞ்ஞானம் வெண்றிராத மரணம் - எனை
வியப்புக்குள்ளாக்கிவிட்டது - உன் மரணத்தில் 
விழுதுகளற்ற மரமாய் - மண்ணில்
சாய்ந்துவிட்டேன் பாதியில் 

எம் கொடியில் மலரந்த இரு மலர்களும் 
உம் நொடிப்பொழுது மறைவில் 
வாடிய வதனங்களுடன் வல்லோனை 
வாஞ்சையுடன் வேண்டுகின்றனர் 

ஆதரவற்ற ஆதரவுகளுடன் 
ஆனாதைகளாய் ஆகிவிட்டோம் 
அல்லும் பகலுமிங்கு அஷ்தமனமாகிறது 
ஆனவைகளத்தனையும் அறிந்தவனின் 
அமைதியான செயலென்று 
அழுவதை மட்டும் நிறுத்தியிருக்கிறேன் 

Saturday, March 23, 2013

வாழும் வரை போராடு.......


உயிர்பெற்றாய் உருவமானாய் 
உணர்வுபெற்றாய் முழுமையானாய் 
மனிதனாய் மலரந்தாய் 
போராட்ட வாழ்வு பெற்றாய்...

கருவறையில் போராடியதால் 
வென்றுவிட்டாய் இவ்வுலகை 
உலகத்துப் போராட்டத்தில்- நீ 
அடையவிருப்பது கல்லறையை 

மனிதா முன்னும் பின்னும் 
திரும்பிப்பார் உன் நிழல்கூட 
உன்னை போராடத்தூண்டுகிறது 
நீ கண்ணயர்ந்திட்டால் 
கனவினிலும் போராடுவாய் 

அற்பமுன் வாழ்நாள் - அதில் 
போராடிச் சாதித்திருப்பதெதுவோ 
இன்று ஒர் போராட்டம் 
இன்றியமையாதது - அது 
சமூகத்திற்காய் நீ போராடுவது 

Wednesday, March 20, 2013

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!எங்களின் விசங்களின்னும் 
சேகரிக்கப்படுகிறது...........
எம்மைச் சீண்டியும் தீண்டாத 
பொறுமையாளர்களென - இன்றே 
கற்றுக்கொடுக்கிறோம் பாடமவர்களுக்கு 

இதுதான் இஸ்லாமியமென 
வெறுப்பவர்களையும் வியந்திடவும் 
பார்ப்பவர்களைக் கவர்ந்திடவும் 
பக்குவம் காத்திருக்கிறதெம் சமுகம் 

ஆங்காங்கு உசுப்பிவிடப்படும் 
உணர்வுகளுக்கு விலங்கிட்டு 
உள்ளத்தால் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் 
சந்தர்ப்பம் ஏற்பட்டால் 
துணிந்து சஹீதாவதற்காக......

இறைவனின் மார்கமது இஸ்லாம் 
அவனே காத்திடவல்லவன் 
பொறுமையாளர்களின் அதிபதியவன் 
பொறுமைகொண்டு காத்துநிற்கிறான் 


Wednesday, March 13, 2013

வேரோடு அறுத்திடுவோம்.........


ஹலாலாய் உண்ணக் காபீரிடம் அனுமதி 
கேட்கவேண்டியவர்களாய் நாங்கள் 
ஏக இறைவன் என்றோ எமக்களித்த 
வரயறைகளை மறந்ததால் 
விழைந்த அறுவடைகள் இவை.....

யாவரும் கூக்குரலிட்டனர் 
அனைவரும் அடங்கிவிட்டனர் 
ஹலாலெதுவென்று தேடக் 
கண்ணாடி வேண்டுமெமக்கு......

ஹலாலே இல்லை இனியென்றதும்  
பட்டாசி வெடித்தனராம் அவர்கள் 
எங்களிதயங்களை பத்தவைத்து 
எரிமலைகளாய் ஆக்கிகிறார்கள் 

அன்று... வணங்கிய தளங்கள் 
இன்று.. உண்ணுகின்ற உணவுகள் 
நாளை.... உடுக்கின்ற உடைகளென 
தொடரும் இவர்களின் வேட்டைகளால் 
தொடரவிருப்பதுதான் எதுவோ........???

Saturday, March 9, 2013

எம் தேசத்தை வாழவிடுங்கள்..........!!!!!!ஆண்டாண்டு காலம் அனுபவித்த
யுத்தமெனும் இருளை நோக்கி
மீண்டும் நடைபோடுகிறதெம் தேசம்

வேண்டாமென்று வெருண்டோடுவோரையும்
வேதனையென்று விலகிநிற்போரையும்
வக்கிரம் செய்து வதைக்கிறார்கள்

அப்பன் அம்மையென்றும்
அக்கே நங்கியென்றும்
அன்னியோன்யம் காத்திருந்த
சமுகமொன்றை சிதைத்து
சுக்குநூறாக்கி சிதறச்சொய்கிறார்கள்

நாடு என்று தன் உயிரிலும் மேலாக
நேசிக்கின்ற சமுகமொன்றை
அன்னியமாய் சித்தரித்து
நாசவலையில் சிக்கிவிடத் துடிக்கிறார்கள்

அன்னிய தேசமெல்லாம் ஒன்றுகூடி
தேசத்தை நாசம் செய்ய விழைந்த போது
இஸ்லாமிய தேசங்கள் திரண்டு
கைகொடுத்த சம்பவங்கள் மறந்து
இஸ்லாமியனுக்கெதிராகவா
அனியாயம் செய்கிறீர்கள்

Tuesday, February 26, 2013

பிரசவிக்கும் வரை......


என் வாழ்வின் கருவாகி 
என் கருவின் தாயாகி 
உலகத் தாய்மைகளுள் திலகமாய் 
திகழ்கிறாய் என்னுள்.....

கருகொண்டு கலங்கினாய் 
கலங்கி நின்று வருந்தினேன் 
கருவுக்காய் உன்பொறுப்பில் 
என்பங்கின்றித் தவிக்கிறேனே....

வெட்டவெளி உன்வயிற்றில் 
வட்ட வட்ட முத்தமிட்டு 
தேற்றினேன் எனைநொந்து 
போற்றுகிறேன் உனக்காக 
வேண்டுகிறேன் அவனிடமே....(allah)

என்நாளும் இணைந்திருக்க 
நாதியற்ற என்வாழ்வில் 
நானிட்ட கடைசி முத்தம் 
என் நாட்களைக் கடத்துகிறது 

என்தயவும் உன்னாலாகி 
என்குழந்தை நிறைவுபெற 
உன்தயவை குறையின்றி 
காத்திடட்டும் வல்லோன் 

பிரிவின் வெறுப்புகளைச் சுமந்து 
சில வரவுகளின் நிறைவுக்காய் 
உணர்வுகளைச் சிறைவைத்து 
நீயின்றியதொரு தேசத்தில் 
உறைந்துகிடக்கிறேன் 

பல சுமைகளெம்மை 
பரிதவிக்கச் செய்கின்றன 
காலத்தோடு பயணித்து 
சுமைகளைப் பிரசவிக்கும் வரை 
பொறுத்திரு என் கண்மணியே...

Thursday, January 10, 2013

றிசானாவின் மரணம்......நடந்தேறியதற்குத் தண்டனையடைந்து
புனிதவதியாய் மரணமெய்தினார் றிசானா
வாக்களித்த இறைவன்
சுவனமதை உறுதியாக்கினான்.

விளைநில இவ்வுலகில்
விதைப்பவைகளால் சுவனமெய்துவது
மனிதவாழ்வின் நோக்கமல்லவா
றிசானாவும் வென்றுவிட்டார்
நாட்டமிது இறைவனது
யார் நாடினும் தடுத்திருக்க முடியாதது

இறைவனின் மார்க்கம்
எமக்களித்த கட்டுப்பாட்டை
யார் மீறினும் எமக்கு
தண்டனையுண்டென்பதை மறந்து
எதிர்வாதமிட்டு பாவியாய் நாமாவதா...?

றிசானாவின் மரணம்
ஆயிரமாயிரம் றிசானாக்களின்
வாழ்க்கையை படம்போட்டுக்
காட்டியிருக்கிறது....


Thursday, January 3, 2013

காமவலி தீர்க்கக் கருவி....


தூண்டப்படாத காமம் 
துயில் கொள்ளுமாம் திணறாது 
தீண்டிய காமம்....
தீரும் வரை தாண்டவமாடுமாம் 

மறுக்க முடியா இயற்கையிது 
மனக் கட்டுப்பாட்டின் பயிற்சியில் 
மனிதனாய் நிலைத்திட 
சூழலிங்கு காரணமாகிறது.. 

மறந்துவிட்ட இறைபக்கதியும் 
மழுங்கிவிட்ட புத்தியும் 
மாந்தரென்று மறந்து - காமத்திற்கு
மிருகங்களாய் மாறுமுலகமின்று 

உலகத்து வரலாறு 
கண்டிராத சம்பவங்கள் 
சாதனைகளாய் அரங்கேறி 
சமகாலச் சரித்திரங்களாய் 
எதிர்காலம் நோக்கி பதிவேறுகிறது 

காமத்தின் உரங்களாய் 
தொழில்நுட்ப மாற்றங்களும் 
பாதுகாவலற்ற வளர்ப்புகளும் 
மனஓட்டங்களின் சமநிலையும் 
தனிமையின் வரவேற்புகளுமென 
நிலைத்துவிட்டன....

Related Posts Plugin for WordPress, Blogger...