இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, February 27, 2016

காதல் சாம்ராஜ்யம்..... பாகம் 02



வேண்டுமொரு துணையெனக்கு 
காதல் வேதனைகள் தீர்த்திடத்தான் 
சாதலானாலும் என்னோடு 
சேர்ந்தே கடந்திடணும் 

காதலென்ற பவணியெனக்கு 
வாழ்வாக அமைந்திடணும்
இவ்வழியில் எனைத்தொலைத்து 
புலம்புவதற்கு நாடவில்லை 

கண்டவுடன் காதலென்கிறாய் 
உன் கருணையின்னும் காணவில்லை 
காதலில் நான் கனியும் வரை 
காதலொன்றும் தேவையில்லை 

காதலென்று கைபிடித்தவன் 
கழட்டிவிட்டு சென்றுவிட்டானாம் 
நொந்தவளும் தூக்கிலிட்டு 
மாய்த்துவிட்டாள் தன்னுயிரை 

பொல்லாத காதலெனக்கும் 
பொல்லாப்பாய் மாறிடுமோ 
பொங்கும் என் காதலையும் 
பொத்திவைத்து காக்கின்றேன் 

சிறப்பான ஒருவனென்று 
திறம்பட அறியும் வரை 
கற்சிலையாய் இருந்தாலும் 
காதலை மட்டும் ஏற்கமாட்டேன் 

                                                                               தொடரும்.......



Tuesday, February 23, 2016

ஆணவம் அழித்துவிடும் மகனே........


என் அன்பு மகனே.... 
அதிகாரங்கள் உனக்கு வந்ததென்று 
ஆணவத்தை ஏன் தலையிலேந்துகிறாய் - அதன் 
சுமையில் உன் தலை கவிழ்ந்துவிடாதா...??

ஆணவப் பேய் கொண்டு 
அழிந்தவர் அகிலத்திலதிகம் 
அறிவாளியாய்த் தானிருந்தும் 
அறிவிலிபோல் நடந்து 
அவமானப் பட்டவரும் அதிகமதிகம்

உன் அன்னையும் ஆசானும் 
கற்றுத் தந்த அடக்கமெங்கே 
அதிரும் உன் வார்த்தைகளால் 
அவதியுண்டு அவர்களுக்கும் 
அறிந்திடு அகமகிழ்வாய் 

என் தங்க மகனே.....
சுற்றத்துச் சூழல் 
சுழலும் உன் வாழ்வில் 
அணைந்திடாச் சுடராய் - என்றும் 
இருள் மட்டும் அகற்றி விடு 
சுட்டரித்திடத் துணிந்திடாதே - அதில் 
வெந்து நீ அழுவது நீயாவாய் 

விண்ணில் நீ பறந்தாலும் 
அடங்குவது ஆறடி மண்ணில்தான் 
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி 
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு 

எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட 
எம் குணம் ஒரு கண்ணாடி 
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி 

இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும் 
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது 
எதிரியாக்கிடா வார்த்தைகளை 
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு 

Sunday, February 21, 2016

வாழவைக்கும் என் காதல்


என் கண்ணடைத்து அழைத்துச்சென்றாய்
செல்லும் இடமெல்லாம் நானும் உன்பின்னே
அடைந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கிறேன்
யாருமற்ற  அனாதரவாய் நான்

நீ மட்டும் உலகமென்று நடந்தேன்
சூழ இருந்தவைகள் அற்பமென்றுணர்ந்தேன்
அற்புதம் அத்தனையிலுமிருக்க
எதையும் நான் காதலிக்கவில்லை

உன் காதல் மட்டும் கட்டிவைத்திருந்தது
தித்திப்பும் அது காட்டிநின்றது
திகைத்திடும் இன்நாளையும்
திடமாய் எனக்கு உணர்த்திவிட்டது

பதட்டம் என்னை அர்ப்பரித்திருக்கிறது
வெடித்துவிடும்போல் மனம் வேதனைப் படுகிறது
உனைக் காதலித்த என் இதயம் - உன்
சொல்லம்புகளால் சுக்குநூறாகியிருக்கிறது

பெண்ணை மட்டும் காதலித்துப் பேதையானேன்
பார் துறக்கும் தருணத்தை நாடலானேன்
பாவை அவளுக்கும் இதயமொன்று இல்லையென
எனைப் பார்த்து அவளும் பரிகாசம் செய்கிறாளே

நாசமே எனக்கு இக் காதலால்தானே
காதலே என்னை மட்டுமேன் யாசகனாக்கினாய்
எனைத்துறந்து வாழத்துடிக்கும் அவளுக்காவது
ஜெயமொன்று கிடைத்திடட்டும் என் காதலால்

Thursday, February 11, 2016

வந்துவிடு என்னவனே......

வந்துவிடு என்னவனே 
வயதென்னை வதைக்கிறது 
சீக்கிரம் வருவாயென்று 
சென்றவழி பார்த்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன் உனக்காகவே 
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறேன் 

கலைந்திடாத கட்டுடலை 
கலைத்தென்னைக் கனியவைத்தாய் 
காதல் அமுதென்று 
கனிவுடனே பரிகிடச்செய்தாய் 
காலமுள்ளவரை தொடர்வாயென்றிருக்க 
கனவுகளாக்கிச் சென்றுவிட்டாயே

தொடரும் உன் நினைவுகள் 
தொடர்கிறதிங்கு நிழல்களாய் 
தொல்லை தரும் உணர்வுகளும் 
தொடுதலின்றித் துடிக்கிறது 
துயில் கொள்ளும் தேகமிங்கு 
திடுக்கிட்டு எழுகிறது 

நெருடும் நினைவுகளோடு 
நொடிகளிங்கு வருடங்களாகி 
நித்தம் உன் வரவுக்காய் 
நெஞ்சம் பதை பதைக்க
நிம்மதியின்றித் தவிக்கிறேன் - என்
நினைவுனக்கு வரவில்லையா??

குறிப்பு : படம் கண்டதால்  உதித்த வரிகள் படத்தினைப் பகிர்ந்த கவிஞர் பாலமுனை பாறூக் அவர்களுக்கு நன்றிகள் 

Wednesday, February 3, 2016

அவமானச் சின்னமா ???? குழந்தை


மறுக்கப்பட்ட அன்பைத்தேடி 
வெறுக்கப்பட்ட அருகாமை தேடி 
ஏமாற்று வலைகளுக்குள் சிக்குண்டு 
உள்ளத்தின் ஏக்கங்களின் வழியில் 
அவமானச் சின்னங்களாய் குழந்தைகள்

பணமே வாழ்வென்றலைந்து 
பிணங்களாய் வாழ்ந்தென்ன லாபம் 
அடக்கியே வளர்க்கிறோமென்று 
அசிங்கங்களை அறிந்திடச்செய்யவில்லை 
அருவருப்பாய் உருவெடுத்திருக்கிறது 

குழந்தையின் தேடலென்ன 
குமரியாய் ஆகிவிட்டாளா??
மார்க்கத்தின் போதனைகளென்ன 
அதன் வழிகளை பின்பற்றுகிறாளா??
என்றெதையும் நோக்கவில்லை 
அறிவிலியாய் வளர்ந்திருக்கிறது 

அன்னியனொருவனின் அரவணைப்பிற்குள் 
சென்றுவிடத் தூண்டியிருப்பதென்ன 
கொன்றுவிடுமளவு பாதகமாய் 
அமைந்துவிட்டிருப்பது எதனால் 
ஆராய்ந்தெவரும் பார்க்கவில்லை 
அசிங்கமென்று அழுகிறோம் 

தவறொன்று நடக்கின்ற போதுதான் 
தவறிவி்ட்டோம் அனைத்திலுமென 
தடுமாறித் தத்தழிக்கிறோமே 
வருமுன் காத்திடத்தான் 
என்ன வகை செய்திருக்கிறோம்!!

வயதிற்கேற்ற வரயறைகளை
வகுத்தறிவித்து வளர்த்து 
அன்பு கலந்த நட்போடு 
அன்னியோன்யமாய்க் கலந்து 
அரிய செல்வமாய் நோக்கிடுங்கள் - நாளை 
விலை மதிப்பற்ற வைரங்காளய் மிளிரும் 



குறிப்பு: அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் சாடல் கருவானது அன்னிய ஆடவனின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவன் மாற்று மதத்தவன் என்றும் பாராது அவன் பின்னே சென்று குடும்பத்திற்கும் சமுகத்திற்கும் களங்கத்தினை ஏற்படுத்தி அனைவரையும் தலைகுனிவுக்குள்ளாக்கியிருக்கின்ற அந்த குற்றவாளிகளை யாராலும் மன்னித்துவிட முடியாது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடந்திடாமல் அனைவரும் விளிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்  ( அந்த குற்றவாளி தற்போது விளக்க மறியலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருபதாக செய்திகள் இவன் இன்னும் பல சம்பவங்களோடு தொடர்பு பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது எது எவ்வாறாகினும் இவர்களை அடையாளங் கண்டு கொள்ளாத எம்மவர்கள் மீதுதான் குற்றமே) 




Related Posts Plugin for WordPress, Blogger...