இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 30, 2015

தொல்லை பேசிகளாகும் தொலைபேசிகள்


தொலை பேசிகளின்று 
தொல்லை பேசிகளாகிறது 
தீயது நாடும் தீயோருக்குள் 
திணிக்கப்படுகிறார்களெம் பெண்கள் 

அனாமோதய அழைப்பு என்றாரம்பித்து 
அதன் பின்னே அணிவகுத்து வசைப்படுத்தி
காமவலை வீசி எம் கண்மணிகளை 
வீழ்த்தி விடுகிறார்கள் காமுகர்கள்.

கண்ணியமாயிருந்தோரும் 
ஆசைக்கு அடிபணிந்து 
அன்னியவனென்று மறந்து 
அன்னியோன்யமாகின்றார்கள் 

அழைப்பொன்று அழைத்துச் செல்கிறது 
அவப்பெயர் தேடி என்பதை மறந்து 
பரிதாபமாய் பாதிவழியில் - அனைத்தும் 
இழந்து உயிரையும் விடுகின்றனரே.....

சுதந்திரம் அனைத்திலும் தேடி - இன்று 
அவதந்திரங்களால் ஒருவரை ஒருவராழ
நீயா நானா சண்டைகள் இடுகிறார்கள் 
பகுத்தறிவுள்ள நாம் சிந்தித்து 
வகுத்தறிந்து நல்வழி வாழ்ந்திடணும்  இப்படைப்பானது *"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்" என்பதற்காக  நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

*வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!

Tuesday, September 29, 2015

உனை உரிமையுடன் வாழ்த்துகிறேன்...... (பஸ்மில்)


எனை ஈன்ற தாய் பாலமுனை 
ஈன்றிருக்கிறதோர் கல்விமானை 
கல்விப்பணிப்பாளராய் மகுடம் சூடி
எம் மண்ணுக்கு மகிழ்வு தந்தாய் 

பெற்றோருக்குப் பெருமை சேர்த்து 
சகோதரங்களுக்குப் புகள்சேர்த்து - எம் 
பிரதேசத்திற்கே நலன் சேர்த்திட 
காலூன்றினாய் கல்வியாளராய்..

பின்தங்கியதெம் பாடசாலையானாலும் 
முன்னேறியதெம் கல்வியென 
நிரூபித்திருக்கிறாய் என்றும் - நின் 
சேவைகளால் வென்றிடு மனங்களை 

எதிர்காலத்தெம் சந்ததியினருக்கு 
உதாரணப் புரிசராய் நீ விளங்கி 
இன்னும் பல கல்விமான்களை 
உருவாக்கிட வகை செய்திடு உன் வழியில்

அனைவரும் உனை பாராட்டிட 
எனக்கும் ஒர் தற்பெருயுன்னால் 
நான் கற்பித்த மாணவன் 
பலர் கற்றுக்கொள்ளக் 
காவலனாய் வீற்றிருக்கிறாயென்று....

துடிப்பான இளைஞன் நீ....
துள்ளலான உன் செயல்களால் 
எம் இளைஞர்களுக்கெல்லாம் 
சீரிய வழிகளைக் காட்டிச் சென்றிடு....

நீ சமூகச் சிந்தையில்
உயர்ந்தவன் என்பதை நானறிவேன் 
திரட்டு உன் தோழமைகளை 
தோலுரித்திடு எம் சமுகத்துக் குற்றங்களை 

அந்த வகையில் ஒரு விண்ணப்பம் 
 சீதனம் வாங்காத மகர்கொடுத்த
உயரிய மணாளனாய் உன் துணை தேர்ந்து 
சுவனத்தினை அடைந்திட உறுதிகொள்...

உன் வாழ்வில் மென்மேலும் 
பல வெற்றிகளடைந்து 
ஈருலகிலும் மகிழ்ந்திட 
இருகரம் ஏந்துகிறேன் இறைவனிடம்  


குறிப்பு :  பாராட்டு விழாவுக்கு முன்னர் எழுதிய கவிதையிது பிரசுரம் தாமதமாகிவிட்டது என் மனதில் எழுந்த மகிழ்வை வரிகளால் வடிவம் கொடுத்து உமை வாழ்த்த ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொண்டேன். நன்றி 

Monday, September 28, 2015

வாழுமுன் சாகின்றாய் மானிடனே....


குடிக்கிறாய் குடிக்கிறாய்
குடிகெடுக்கக் குடிக்கிறாய் 
குடித்துவிட்டுக் கெடுக்கிறாய் 
குலப் பெருமை கெடுக்கிறாய்

அற்ப சுகத்திற்க்காய் மண்டியிட்டு 
மனை வித்துக் குடிக்கிறாய் 
விசமாகுது குடியென்று தெரிந்தும் 
தாலியறுத்துக் குடிக்கிறாய்  

பண்பாடு பேசும் சமுகத்தில் 
பகலிரவாய்க் குடியாலாட்டங்கள் 
குடித்த பின் மதிமயங்கி 
மகள் மடியிலும் கை வைக்கிறாய் 

குடியால் பணமும் விரயமாகி 
உடல் நலமும் நலிவுற்று 
சமுகத்து உதவாக்கரையாக - நீ
வாழுமுன் சாகின்றாய் மானிடனே....

டாஸ்மாக்கை மூடென 
போராட்டத்தால் என்னபயன் 
குடிகாரன் திருந்தினால் 
டாஸ்மாக்கே அழிந்திடும் தானாக 

மக்களைக் காக்கும் அரசுகளே....மதுவினை
இலபத்திற்காய் இறக்குமதி செய்து 
கலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்வதா - அதை  
தடைசெய்து நல்ல தலைமுறை உருவாக்குங்கள்  


இப்படைப்பானது *"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்" என்பதற்காக  நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

*வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!

பாலமுனை நிகழ்வில் ஏமாறியது யார்?????


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹ் 

எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.  
கடந்த 26ம் திகதி பாலமுனை மண்ணில் பல்கலைக் கழக வெற்றியாளர்களாக மகுடம் சூடிய பட்டதாரிகளுக்கான பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்து சிறப்புற நடாத்தி முடித்த அல் அறபா விளையாட்டுக்கழகத்திற்கு முதற்கண் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

அந்த நிகழ்வில் புகழப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் மென்மேலும் வாழ்வில் பல வெற்றிகளடைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறோம். 

பெருந்திரளான மக்கள் மன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நடந்தேறியிருக்கின்ற ஒரு அசம்பாவிதத்திற்கு விளக்கம் கோருவதாகவே இந்த கருத்தாடல் அமைந்திருக்கிறது என்பதை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம் 

அனைத்து அரசியல் வாதிகளையும் அரியணை ஏற்றி வாழவைத்து அழகு பார்த்த ஒரு எடுத்துக்காட்டான கிராமம் என்றால் அது பாலமுனை என்பதை அனைவரும் ஒரு சேர ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு மதிப்பினை மக்கள் கடந்த காலங்களில் வழங்கி வந்திருக்கிறார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும். 

இந்த விழாவுக்காக முதலமைச்சரின் ஏமாற்றுச் சரிதை எங்களனைவரையும் ஏமாறச் செய்திருக்கிறது என்பதை தெரிவித்து கொள்ள முனைகிறோம். முதலமைச்சரிடம் உறுதியாக அவகாசம் பெற்ற பின்னரே விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இருந்த போதிலும் அவர் அவ்விழாவுக்கு வருகை தராமல் அனைத்து மக்களையும் ஏமாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எவ்வாறான பிரச்சினைகள் இருந்திருந்தாலும் அதனை சுமுகமாக தீர்த்து வைத்து அவ்விழாவுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருப்பார்களானால் அதுவே அங்கு பாராட்டுப்பெற்றவர்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் கௌரவமளிப்பதாக அமைந்திருக்கும் என்பதை ஏன் உணர மறுத்திருக்கிறார்களென்பது கேள்விக்குறியாகும் 

அதற்கான காரணத்தினை ஆராயுமிடத்து அட்டாளைச் சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரது பெயர் அழைப்பு அட்டையில் உள்வாங்கப்படாமையின் காரணமாக அவரது பிடிவாதத்தில் அவரது சொல் கேட்டு முதலமைச்சரும் பாலமுனை மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்று தகவலறிந்து வேதனை அடைகிறோம். 

எங்களது பிரதேசத்து மாகாண சபை உறுப்பினரைப் பொறுத்தவரை எங்களது அவசியம் என்ன என்பதை அவர் நன்றாக அறிந்தவர் இந்த விழாவினை ஒரு அரசியல் நோக்காக கொள்ளாது ஒரு கல்வி சார் பொது நிகழ்வாக கருதி அதில் எந்த ஒரு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தாலும் தனது வீட்டு நிகழ்வாக நோக்கி தன்னை அழைத்திரா விட்டாலும் அங்கு சென்று அவரது பிரசன்னமிருந்திருந்தால் ஒரு படி மேல் மக்களின் மனங்களை வென்றிருப்பார் என்பது நிச்சயம். அதை விடுத்து எனது பெயர் உள்வாங்கப்படாமல் அழைப்பிதழ் கொடுத்து முதலமைச்சரை அழைத்து விழா நடாத்துவதா என்று சவாலிட்டு சாதித்திருப்பது வருந்தத் தக்க விடயமாக பார்க்கிறோம் 

இவைகளை ஒரு சமரச நிலைக்கு கொண்டு வந்து அனைத்து சாராரையும் ஒருமைப்படுத்தாத முதலமைச்சரின் செயலையும் வெகுவாக விமர்சனத்துக்குள்ளாக்குகின்றோம் 

அழைப்பிதழ் எத்தனை பக்கங்களானாலும் பறவாயில்லை எம் பிரதேசத்து அனைத்து அரசியல் வாதிகளின் பெயர்களையும் உள்வாங்கி அவர்களை கௌரவப்படுத்தி அவர்கள் மனங்களுக்கும் மகிழ்வு கொடுத்திருக்காலாமே என்று அறபா விளையாட்டுக் கழகத்தினை கடிந்து கொள்கின்றோம் 

வெகு சிறப்பாக நடந்தேற வேண்டிய இவ்விழா ஈற்றில் விமர்சனங்களால் வகைசெய்யப்பட்டு அனைவரது மனங்களுக்கும் சலசலப்பினை தோற்றுவித்திருக்கிறது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வேண்டிநிற்கிறோம். 

மக்களின் சேவகர்கள் மக்களின் மன்றில் மன்னர்களாகத்தான் வீற்றிருக்க வேண்டும் சுயநலம் கருதி மக்களின் மனங்களைக் காயப்படுத்தினால் ஆறிடா வடுக்களாக மாறிடும் ஒரு நாள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. 
கடந்த பல தசாப்தங்களாக ஏமாற்றங்களால் அலங்கரிக்கப்படும் எங்களது வாழ்வுக்கு இது ஒன்றும் புதிதல்ல விண்ணைத் தொடும் வெற்றிகளடைந்தும் இன்னும் ஏமாற்றப்படுகிறோமே என்பதுதான் வருத்தமாகின்றது.  நன்றி 

Saturday, September 19, 2015

தூக்கிலிடுங்கள் அவனை.....!!!!


புத்தி கெட்ட மனிதனே - உன் 
காமம் தலைக்கேறி 
கண் கெட்ட பூஜை உன்னால் 
பச்சிளம் பாலகனையும் 
பாலுணர்வால் நாசம் செய்கிறாய் 

குற்றமறிந்திடாக் குழந்தையினை 
உயர் செல்வமாய்ப் பார்த்திடாது 
உன் குறுகிய போதைக்காய் 
சீரழித்துச் சிதைத்து - நீ 
சாதித்திருப்பதுதான் என்ன...??

நாசமானவனே உன் 
காமப் பசிதீர்க்க 
பல சீரிய வழி  இருக்கையில் 
சீயென நடந்து கொள்கிறாய்.....  

கலாச்சாரச் சீர்கேடும் 
சமுகத்தின் கவனயீனமும் - உனை 
காமத்திற்கு தூண்டியிருந்தால் 
உன் ஆறாம் அறிவு மங்கிவிட்டதா???

வாளத்தகுதியற்ற மானிடன் நீ..
உனை தூக்கிலிடுவதைத் தவிர 
எத்தண்டனையும் ஈடாகாது 
படைத்தவன் கூட மன்னித்திடமாட்டான் 

சமுகத்தலைமைகளே...
சமுகம் காக்கப்பட வேண்டுமென்றால் 
இவ்வாறானவர்களை மன்னிக்காது 
சந்தியில் நிறுத்தி தூக்கிலிடுங்கள் - மீண்டும் 
முனைபவன் விழித்துக்கொள்வான் 

Thursday, September 17, 2015

தனிமைக்கு விடைகொடு......


மனசெல்லாம் ஆக்கிரமித்தவளே....
கனக்கிறதென் மனசு 
சுமையகற்றும் வார்த்தைகளுக்காய் 
ஏங்கி நிற்கிறதென் மனசு.....

முற்றுந் துறந்த முனியாய் 
தலை குனிந்து  - உன் 
வழி நடக்கின்றேன் 
பாதிவழியிலேன்  தவிக்கவிடுகிறாய்

உன் போன்று ஊமையாகிட 
நானுந்தான் முயற்சிக்கிறேன் 
உன் நினைவம்புகள் வந்து 
என்னுள்ளிருக்கும் - உன் 
இதயத்தையல்லவா தைக்கிறது 

ஒவ்வொரு நொடியும் 
உறக்கம் கலைத்திடும் 
உயரிய காதலை விதைத்து 
உளம் நிறைந்து வாழ்கிறாயிங்கு 

என் தவிப்பினை அறிந்திருந்தும் 
உன் தவிப்போடு ஏன் போர்புரிகிறாய் 
சமாதானம் சாந்தியோடு 
சகலமும் நாமாகிடுவோமே....

தங்கமே இத்தரணியில் 
உனையின்றித் துணை வேறேதடி
தனிமைக்கு நீ விடைகொடு 
தற்பெருமையோடு வாழ்ந்திடலாம் 


நான் கண்ட ஒரு சிலரது வாழ்வோடு ஒட்டியதான ஒரு கவிதையிது 
எனைச் சுற்றிய பலரது வாழ்க்கையில் இவ்வாறான போராட்டத்தினைக் கண்டேன்.  
அதை வைத்தே கவிதையாக்கினேன் இக் கவிதையின் கருவானது என்னுடையது அல்லாது இன்னாருடையது என்றும் நான் உரிமை கொடுத்திடவும்  முனையவில்லை என் கவிதையின் வாசகர்களுக்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்  

Wednesday, September 16, 2015

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

மரமொன்று விதைத்து 
ஒற்றுமை என்னும் உரமிட்டு
ஆல விரூட்சமாய் வேரூண்றிட 
வகைசெய்த தலைவன் நீ.....

அன்றைய இத்தினத்தில் 
காற்றலைச் செய்தியாக 
வானூர்தி விபத்தில் - உம் 
மரணமென்றார்கள்....

வீதிகளெங்கும் மரண ஓலம் 
மக்களுக்காய் உழைத்தவனின் 
மரணத்தைக் கூட மறுத்தது மனங்கள் 
விழித்திருந்து விடை கொடுத்தார்கள் 

15 வருடங்கள் கடந்துதான் விட்டது 
பாதகத்தின் சூத்திரமின்னுந் துலங்கவில்லை 
நீ வளர்த்த தலைமைகளின்னும் 
வினவியதாகவும் தெரியவில்லை....

உம் மறைவில் ஒன்றுமட்டும் 
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி 
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில் 
மட்டும் ஒப்பாரி  வைக்கிறார்கள் 

நீ காட்டிய வழியில் 
இன்றொரு தலைவன் பயணிக்கிறான் 
ஆனாலும் அன்றைய நிலை இன்றில்லை 
எதிர்காலமதை வென்றிடுமோ தெரியவில்லை 

நானன்று பாலகனாய் இருந்தபோது 
என் மண்ணில் உன் மேடையில் 
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு 
எனையழைத்து உச்சி மோர்ந்தாய் 
மெய்ச்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது 

நீ ஓங்கிய விரல் கண்டு 
வீங்கியது ஆட்சியர்களின் உள்ளம் 
நீ வகுத்த வியூகங்களால் 
வியர்த்தார்கள் பயந்து 
வீழ்த்தி விட்டார்கள் கோழைகளாய் 

சுவனமது உனக்காகியது - உம் 
சுவடுகள் மட்டும் அசைபோடப்படுகிறது 
உனைத் தலைவனாய் ஏற்றவனென்றும் 
விலைபோகாத போராளியாய்
 உன்வழியில் மரணித்திடுவான்.

Tuesday, September 15, 2015

கடந்த பாதை.......


முக்காலமும் சேர்ந்தே நடந்தோம் 
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை 
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும் 
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும் 

சுற்றம் எமை சூழ்ந்த போதும் 
பதற்றமின்றிய எம்வாழ்வில் 
சிதறல்கள் ஏதுமில்லா 
சீரிய பாதையினை அமைத்திருந்தோம் 

நாம் நடந்த பாதைகள் 
சுவடுகளாய் மட்டும் 
தடம் பதிந்து விட்டது 
ஏடுகளெதுவும் கண்டிடாத 
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....


Monday, September 14, 2015

ஊனம் உணர்த்துமா..??

எத்தனை காசுகள் குமிந்தாலும் 
அத்தனையும் துச்சமுன் சுமைக்கு 
அச்சமின்றி வாழ்ந்திடத் துணிந்த 
நெஞ்சமுன் நிலையை மெச்சுகிறேன் 

இறைவனின் படைப்பில் 
வடிவங்கள் பல்லாயிரம் 
உனை வடிவமைத்து 
உலகுக்குக் கற்றுக்கொடுக்கிறான் 

ஊனமான உள்ளங்களுடன் 
உலாவரும் மனிதர்களோ..
உவகையுன்னால் உணர்ந்து 
படிப்பினைதான் பெற்றிடுவார்களா..??

Wednesday, September 9, 2015

இதயத்தரசி நீ.......

என் இதயத்திருடியாய் மலர்ந்து 
இல்லத்தரசியாய் மாறிய 
இறைவனின் ஈகையில்
கிடைத்திட்ட இமயம் நீ.....

இது நாள்வரை இணைபிரியா....
இன்பங்கள் கொட்டித்தந்தாய் 
வாழ்வின் அந்தமுன் துணையென 
உன்மார்பில்  ஏந்தி நின்கின்றாய்....

இம்மியளவும் குறையாத 
காதலமுதம் பரிகிடச்செய்கிறாய் 
எம் காதலுலகில் வாழுகின்ற 
தேவலோகக் கன்னியாகின்றாய் 

இன்றுனக்கு முப்பது ஆகிவிட
முழுமதியாய் என் வாழ்வினில் 
மகிழ்வின் உச்சத்தினை 
உளமாற உகந்தளிக்கின்றாய்...

வாழ்வின் வளமெதுவென்று 
மென்மையாகப் புரிந்து 
வன்மையாகப் பாதைவகுத்து 
வளமாக்கினாய் உன்வாழ்வை....

உற்றாரும் சுற்றாரும்  
கூடிமெச்சிடும் குலவிளக்காய் 
அச்சமின்றிய அகல்விளக்காய் 
துலங்கின்றாய் உன் பாதையில்.....

சுதந்திப்பறவயாய் நான் விட்டும் 
அனுமதிக்காய்த் தவமிருந்து 
சாதனை உன்செயல்களால் 
புதைந்துவிட்டாய் என்னுள்ளத்தில் 

நல்லதோர் பிள்ளை நீ 
பரிவான சகோதரம் நீ 
அன்பானதோர் துணைவி நீ..
பாசமான தாயும் நீ...
பண்பான தோழமையும் நீ 

அகல விரிந்தாய் அனைவர் மனதிலும் 
 மகிழ்ந்திடு ஈருலகமும் சிறந்து
இறைவனே துணை என்றுமுனக்கு 
சுவனமே பரிசாய் தந்திட மட்டும் 
வல்லோனை வேண்டுகிறேன்....

Tuesday, September 1, 2015

காதல் சாம்ராஜ்யம்.....


காதல் ஊற்று
ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....

அவளின் ஓரக்கண் பார்வையும் 
ஒளிந்து மறைந்த சாடலும் 
எனைத் தொலைத்து - அவளைத் 
தொடர்ந்திடச் செய்கிறது....

என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது 
காதல் சாம்ராஜ்யமொன்று 
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....

என் தியாகம் நீ புரிந்து 
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு 
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...

ஏற்றுக் கொள்வாயா....?
ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து 
சீராயொரு வாழ்வளித்திடு.....
 


முற்றிலும் கற்பனையே..............தொடரும் 
Related Posts Plugin for WordPress, Blogger...