விழிகள் பல வியக்கின்ற
படோபகாரப் பந்தல்களில்
பாலமுனை மண் - பால்நிலா
இரவுகளாய் மிளிர்கின்றது!
மார்ச் 19 என்னும் சரித்திர நாள்
பாலமுனை வரலாற்றுக்கே
கிடைத்த பொன்னாடைத் திருநாள்
புகழ் பெறுகின்றதின்னாள்!
பெருந்தலைவனின் வழியில்
எம் தலைவனின் துணிவில்
எம் பொன்னூராம் பாலமுனைக்குச்
சூடிய மகுடமாய் இந்நாள்
எம் மண் ஈன்ற இளவல் அன்சீலின்
சாதனைக்கொரு சவாலாய்
அமைந்ததின்னாளை - பரிவாரங்களின்
பக்கபலங்கொண்டு சாதனையாக்கி
வெற்றியாளனாய் வீற்றிருக்கிறான்
சீறிய சில குரல்களையும்
சிணுங்கிய சில மனங்களையும்
செல்லாக் காசுகளாக்கி
சிலிர்த்து நிற்கிறதின்னாள்
தலைவன் உத்தரவென்று பணிந்து
தளபதிகளெல்லாம் தூக்கம் தொலைத்து
உழைத்திருந்த இரவுகள் - இன்று
பகல் நிலவாய் மகிழ்ந்து மின்னுகிறது
விருந்தினர்களின் வருகைக்கு
போராளிகளின் பெருவெள்ளம்
தாகம் தீர்ப்பதாய் அமைந்துவிட
தார்மீகப் பொறுப்புகள் உணர்த்தும்
சந்தர்ப்பமாய் அமைகின்றதின்னாள்
முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில்
தசாப்தங்கள் கடந்த வரலாறு கண்டும்
ஏக்கங்களின் கேள்விகளோடின்னும்
ஏழைகளாய் எம் போராளிகள்
தேன் கூடு கலைக்கும் எட்டப்பராய்
ஒற்றுமை குலைக்கும் எம் சகாக்கள்
ஒவ்வாமை நிகழ்வுகளை நோக்கி
காய் நகர்த்தல்கள் செய்கிறார்கள்
என்ன சதி யார் செய்தாலும்
சோரம் போகாத சொந்தங்கள்
மாமனிதனின் வழியில் உள்ளவரை
வீழாது எம் மரம் வாழும்
இவ்வுலகின் முடிவுவரை
எம் தலைவனை நோக்கி
இட்டுக்கட்டப்படும் அவதூறுகள்
மலையளவு குவிந்து கிடந்தாலும்
மாறிடா மனங்களோடின்னும்
வேங்கைகளாய்க் காத்திருக்கிறோம்
இருப்பவர்களை அணைத்தெடுத்து
பிரிந்து நிற்பவர்ளை சேர்த்தெடுத்து
முஸ்லிம் என்ற ஓர் கொடி நாட்டி
புதிய சரித்திரம் படைத்திட வேண்டும்
கடந்தவைகளை மறந்தவைகளாக்கி
காலத்தின் கட்டாயத்திற்கேற்ப
கண்ணிய மார்க்கம் சொல்லும் வழியில்
ஒன்று சேருங்களேன் சகோதரர்களே
கூடிக் கலைந்ததாய் மட்டும் இந்நாளை(19)
அநாதையாக்கி அவமதித்திடாதீர்கள்
பாலமுனை மண் எழுதிய புதிய வரலாறாய்
நாளைய சந்ததிக்கு விட்டுச் செல்லுங்கள்!

0 comments:
Post a Comment