காலாகாலத்து அனர்த்தங்கள்
உணர்த்துகிறது மனிதாபிமானமெதுவென்று
ஈரமற்று வற்றிக்கிடந்த மனிதாபிமானத்தினை
பெருமழை வந்து ஊற்றெடுக்கச் செய்திருக்கிறது
ஜாதிமத பேதங்களால் அன்னியமாகி
அன்பறுந்த குரோதங்கள் வளர்த்து
அயலவனின் அவலங்களில் மகிழ்ந்து
அகம் நிறைந்து சாதித்தவருமுண்டு
தனக்கென அனைத்தும் வேண்டுமென
தமையனானாலும் தர மறுத்து
தஞ்சம் தன் சொத்தெனப் பதுக்கி
கஞ்சன்தானென ஏற்றவருமுண்டு
வானத்து ஓர்குடையின் கீழ் பிறந்த
மனிதர்கள் நாம் ஒன்றே என்று
மழையும் கண்ணீராய்ப் பெருக்கெடுத்து
அனைத்தும் இழந்தோராய் ஒன்றுசேர்த்தது
இளகிடா மனங்களும் வருந்தி
இரங்கிடா மனிதங்களும் இரக்கம் கொண்டு
இதுதான் மனிதாபிமானமென்று
நிரூபித்தனர் வள்ளல்களாய் அன்று
0 comments:
Post a Comment