இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, June 30, 2011

நண்பனே மறுமை காத்திருக்கிறது

நண்பனே உன்னாயுட்காலம் 
உன்னைவிட்டும் விரண்டோடுகிறது 
மண்ணறை உமக்காக 
எதிர்பார்த்திருக்கிறது 

மறுமையின் விளைநிலமான 
இவ்வுலகில் எவற்றை அறுவடைசெய்தாயோ 
அவற்றோடு மட்டும் உன் பயணம் 
ஆரம்பமாக இருக்கிறது 

தோழனே உனைப்படைத்த இறைவன் 
உனை விசாரிப்பதற்குமுன்
சுய விசாரணை செய்துகொள்
நாளை கைசேதப்பட நேரிடும் 

Monday, June 27, 2011

சினிமாவிலேன் மோகம்.....

சினிமாவெனும் சித்திரம் 
சிந்திக்க வழி செய்கிறதா 
சீரழித்து சிதைக்கின்றதா - என 
சினங்கொள்ளச்செய்கிறதே....


கலாச்சார மாசுபடுத்தல்களோடு 
கலங்கச்செய்யும் பல்லாயிரம் நிகழ்வுகள் 
சாதாரணமாய் அரங்கேறுகின்றது 
பொறுத்திடவும் முடிவதில்லை 
சரித்திரங்களும் மாறவில்லை 


தான் பெற்ற மகளை 
காமப்பேய்களுக்குப் பலிகொடுத்து 
சினிமாவில் சம்பாதித்திட அதன் 
மோகமேன் கண்ணை மறைத்திருக்கிறது 

Sunday, June 26, 2011

என் பொற்காலம்......



விடியலின் சூரியன் 
உலகுக்கு வளக்காகிறது 
என் நிதர்சன வாழ்க்கைக்கு 
உதயசூரியன் நீயாகிறாய் 

உன்னதமான காதலோடு 
உறவுக்குள் உள்வாங்கினாய் 
எதிர்பார்ப்புகளுக்கதிகமாக 
எல்லாமே உகந்தளித்தாய் 

உன்னன்பில் திளைத்துவிட்டேன் 
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன் 
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும் 
என்பொற்காலமாய் உணர்கிறேன் 

Wednesday, June 22, 2011

கருணை காட்டுவாயா ??

காத்தால மாடுமேய்க்க போனவரை
கருக்கலிலும் காணலியே
பாழாப்போன காதலால
பகலிரவா தவிப்புத்தான்

ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது

Sunday, June 19, 2011

தீயசெயல்கள் தீயாகிறது


தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு 
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது 
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை 
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை 

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும் 
பாதகங்களற்ற செயல்கள் மறந்து 
வளரும் முளையினை தளிரும்போதே 
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள் 

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில் 
தனைமறந்த குழந்தை  கவ்வும்போது 
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல் 
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு

Saturday, June 18, 2011

அன்பே உன் மடிவேண்டும்

அன்பே என்றுமுன் மடிவேண்டும்
அன்புள்ளமுன் துணைவேண்டும்
காதலர்களாய் வாழ்ந்திட வேண்டும்
கானங்கள் பல இசைத்திட வேண்டும்

இன்பங்களுன்னால் அடைந்திட வேண்டும்
இனியொரு உலகம் மறந்திட வேண்டும்
சொந்தங்கள் நாமாய் மாறிட வேண்டும்
சரித்திரமே எம்மால் புகழ்பெற வேண்டும் 

தித்திப்போடென்றும் திகள வேண்டும் 
மறதியிலும் உன்னை நினைத்திட வேண்டும் 
காதலுக்குப் பாடம் கற்றுத்தர வேண்டும் 
கலியுகமே வியக்கும் காதலர்களாக வேண்டும் 

Sunday, June 12, 2011

ஈழத்துப் பாலகன்

அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி 
கருவறையிலும் வேதனையடைந்தேன் 
அன்னைவழி அவலங்களுடன் 


தினமும் கதறியழுவாள் 
தினமும் வெருண்டோடுவாள் 
என்ன நடக்கிறதென்றுபுரியாது 
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன் 


நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து 
ஐயோ என்றழுததென்மனம் 
சின்னாபின்னமாகிய உடல்களும் 
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில் 
என் உலகத்து ஜனனம் 


நான் பசியால் அழுதபோது 
பட்டிணியில் கிடந்த என்தாயின் 
மார்பில் தொங்கியும் 
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன் 





Related Posts Plugin for WordPress, Blogger...