கறுத்த பையன்
கருநாவப் பழங்கொண்டு
கருவிழிப் பார்வையில்
கருத்துகள் பல சொல்லுகிறான்
வெயில் காலமிது
வியர்க்கிறது தேகம்
வண்டியெதையும் காணவில்லை
வாங்கிடத்தான் யாருமில்லை
அரிசி கறி வாங்கிட
வேறு வழி ஏதுமின்றி
வள்ளியம்மாள் காத்திருப்பாள்
வெறும் பானை சட்டிகளோடு
கற்றுத்தேறும் வயசெனக்கு
கல்விக் கூடம் செல்லவில்லை
விதிசெய்த விளையாட்டில்
வியாபாரியாகிவிட்டேன்
விற்கிறேன் வயிற்றுப் பசிக்காய்
விலைபோகிறது இளமையுந்தான்
வீதியோரத்து அவலமாகி
விடைதேடுகிறேன் விடியலுக்காய்
உயிராய்ப் பிறந்ததையிட்டு
உளமிங்கு அழுகிறது
விலைமட்டும் பேசாதீர்கள்
வேதனை தீர்க்க வகைசெய்யுங்கள்
குறிப்பு : தோழன் முஸம்மிலின் படத்திற்காக எழுதிய கவிதைவரிகள் மிக்க நன்றி நண்பா....... இந்தப் படத்தினை கண்ட போது கனத்துவிட்டது உள்ளம்
1 comments:
வயிற்றுப்பசிக்காய்
இளைமை விலை போக
வீதியோரத்தில் அமர்ந்து
விடியலை தேடுமிவன்
கண்ணில் தெரிவதெல்லாம்...
நாளைய எதிர்காலம்...!
கவிதையும் கருவும் அருமை ஹாசிம். இம்மாதிரியான குட்டீஸ்களிடம் விலை பேசாமல் அப்படியே அத்தனையையும் வாங்கிடத்தான் வேண்டும்.
இதே பாதைகளை கடந்ததனால் இதன் வலி நானும் உணர்வேன்.
Post a Comment