என் அன்பு மகனே....
அதிகாரங்கள் உனக்கு வந்ததென்று
ஆணவத்தை ஏன் தலையிலேந்துகிறாய் - அதன்
சுமையில் உன் தலை கவிழ்ந்துவிடாதா...??
ஆணவப் பேய் கொண்டு
அழிந்தவர் அகிலத்திலதிகம்
அறிவாளியாய்த் தானிருந்தும்
அறிவிலிபோல் நடந்து
அவமானப் பட்டவரும் அதிகமதிகம்
உன் அன்னையும் ஆசானும்
கற்றுத் தந்த அடக்கமெங்கே
அதிரும் உன் வார்த்தைகளால்
அவதியுண்டு அவர்களுக்கும்
அறிந்திடு அகமகிழ்வாய்
என் தங்க மகனே.....
சுற்றத்துச் சூழல்
சுழலும் உன் வாழ்வில்
அணைந்திடாச் சுடராய் - என்றும்
இருள் மட்டும் அகற்றி விடு
சுட்டரித்திடத் துணிந்திடாதே - அதில்
வெந்து நீ அழுவது நீயாவாய்
விண்ணில் நீ பறந்தாலும்
அடங்குவது ஆறடி மண்ணில்தான்
அடக்கம் உன் நாவிலும் நடத்தையிலுமேந்தி
நல்லாட்சியாளனாய் மனங்களை வென்றிடு
எனைத் தாங்கும் உயிரே நீ....
ஒன்று மட்டும் உணர்ந்து நட
எம் குணம் ஒரு கண்ணாடி
நாம் காணும் விம்பங்கள் எம் முன்னாடி
இன்றய காயங்கள் நாளைய தழும்புகளாகும்
எத்தளர்வும் உமை தடுத்திடக்கூடாது
எதிரியாக்கிடா வார்த்தைகளை
உன் வாழ்விலேந்தி வளமாக்கிடு
3 comments:
இந்தக் காலச் சூழலுக்கு அவசியமான
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இந்தக் காலச் சூழலுக்கு அவசியமான
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
மிக அருமையான வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment