தொடர் கவிதையின் தொகுப்பு ஒரே பதிவில்
பிறப்பால் அனாதையாக்கப்பட்டுவளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை
தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை
என் ஏக்கம் தொலைத்த
என் உயிரிலும் மேலான
தாயம்மாளின் மரணம்
தரணியை இழந்ததாக
உணர்த்தியதை மறக்கவில்லை
நடு நிசி ஓரிரவில்
காவல்காரனின் சில்மிசத்தைஎதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை
அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை
என் வாழ்வின் சூரியன்
எப்போது உதயமாவானென
விடியலைத்தேடிய போது
ஒளியொன்று புலர்ந்த
நொடியினை மறக்கவில்லை
எதிர்பார்ப்பு நிறைவுற்றதா?? இவள் தொடர்வாள்.................
எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை
மூடனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுள் ஏனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை
என்நிலை கண்ட தோழி
உன்க்குள்ளும் காதலோ..
உரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டல்செய்தபோதே அழைக்கப்பட்டு
நான் ஓடிய வேகம் மறக்கவில்லை
எதற்காக ஓடினாள்........????
கண்ணடைத்து இருண்டிருக்ககட்டிலில் கிடந்த உணர்வு
முடியாமல் கண் திற்நத போது
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு
அதிர்ந்ததை மறக்கவில்லை
என் பார்வையில் கேள்வியறிந்த தோழி
சாந்தி பெறு சரியாகிடுமென்ற சைகையில்
என்காலின் வலியுணர்ந்து
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை
எதிர்பார்த்திருந்த காகிதம்
காத்திருக்கிறதென்றறிந்து
கால்கள் விரைந்தபோது
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து
எனைத் தேற்றியதை மறக்கவில்லை
காலமும் வைத்தியமும்
எனக்களித்த ஆறுதலோடு
எட்டுவைத்து நடக்க
எழுந்துநின்ற மாலைப்பொழுதில்
வந்துநின்ற ஆடவனைக்கண்டு
அதிர்ந்த நிமிடம் மறக்கவில்லை
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை
கவிதையோடு வருவாள்........
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்
அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்
எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்
உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்
வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை
தழுவலில் எமை மறந்து
சூழல்நிலையும் மறந்து
சுவர்க்கம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை
இன்னும் தொடர்வாள்...........
சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஒதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை
இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை
ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை
அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை
வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை
பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை
தொடர்வாள்...........
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை
உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை
இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை
அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை
என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை
ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை
விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை
தொடர்வாள்........
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை
மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை
அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை
ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை
காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை
காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை
விடிந்த இரவு விழித்த முழுமனிசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை
என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................
தன்மானத்தின் தலைவனாய்தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை
இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை
உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தனாய் வளர்ந்ததை மறக்கவில்லை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை
கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அவஸ்த்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை
பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையுடன்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வார்த்தையில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை
தொடர்வாள் அவள் சோகங்களுடன்
வயிற்றுச்சுமை தீருமுன்னேமனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை
அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை
ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்து
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை
தாயின் பரிதவிப்புடன் சேயும் துடித்தது - என்
தங்கத்தின் உழைச்சலை சாதாரணமாய் கொண்டு
அன்பைக்காத்திட பாசத்தை மறந்து
உண்ணமறுத்த உணவு
விசமாய் வீழ்த்தியதென்குழந்தையை
அறிந்தபோதுதான் அழுதேனதை மறக்கவில்லை
எனக்கெனத்துணைவர என்பிள்ளை
பிறப்பானென்ற கனவும்
காலம் முழுதும் துணைவர
கணவனிருக்கிறானென்ற ஆசையும்
நிராசையாகிக் கலைந்து
தனிமையானதை மறக்கவில்லை
எத்தனைநாளழுவது எதற்காக
அழுவதென்ற வீராப்புடன்
பிரிந்தவைகளை நினைத்து
வருந்தியென்ன லாபமென்று
வருந்தினேனெனை விரைந்து
போராடத்துணிந்ததை மறக்கவில்லை
இவளது போராட்டம் தொடரும்
தடுமாறிய வாழ்வின் துடுப்பினைத் தேடி
வாழ்வின் ஆழம் வரை அலையநேர்ந்தது
இறந்தது குழந்தை இருப்பதும் (கணவன்)
குழந்தையாகவே உணர்நதேனதை மறக்கவில்லை
இருந்தவைகளை இழந்திருந்து
வைத்திய சேவைக்கே யாசகம் தேடும் நிலையில்
மீண்டும் துயர் மீளாத்துயராகி
வயிற்றைக்கழுவ வேலையும் தேடி
அலைந்த போது தருபவர்களும்(உடலை) கேட்டபோது
கொடுத்துப்பெற மறுத்ததென் மனம் - இருந்தும்
என்னை இழக்காததை மறக்கவில்லை
அழகையும் அறிவையும் படைத்த இறைவன்
எனோடு துயர்களையும் பிறக்கச்செய்தானேன்
என்ற கேள்விகளை எனக்குள் நான் கேட்கலானேன்
என்னைத் தாங்க முடியாமல் அழுத கணவனின்
கண்ணீரில் தினமும் நனைந்ததை
என்நெஞ்சமின்னும் மறக்கவில்லை
இளமை உனக்குண்டு கண்ணே
இனிய வாழ்வும் உனக்கு வேண்டுமடி
இன்பம் என்னால் இல்லையென்றானதால்
மறுமணத்தில் நாட்டம் கொள்ளடியென்று
பலதடவை தன்னை மாய்க்கத்துணிந்த
உத்தமனை எப்போதுமே மறக்கவில்லை
கட்டுடல் உனதெடி கசங்கிடா மலர் நீயெடி
கட்டில் சுகம் தருகிறேன் காலம் முழுதும்
என்னோடு தொடரெடி என்றெல்லாம்
கயவர் கூட்டத்தின் நச்சரிப்புகளை
என்றும் என்வழியில் எற்றபோது
இறந்திட மனம் துடித்ததை மறக்கவில்லை
உண்மைக்காதலை மனதிலும்
வைராக்கியம் கொண்ட போராட்டமுமாய்
பொழுதுகளை வழியனுப்பினாலும்
விழுமியங்கள் நழுவிடாத நிலையுடன்
என்னை நான் நிரூபித்திருப்பதை
மறதியிலும் நான் மறக்கவில்லை
தொடர்வாள் .........பல தொடர்களில்
காத்திராத காலம் கரைந்தோடியது
கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை
கிடைத்த வேலைகளோடு பசியாறி
மிகுதியான நேரங்களில் தாதியாகி
கடந்த நாட்ளில் ஓர் நாளில் பேரதிர்வு
நாற்காலியில் இருந்த கணவன்
இருந்தவாறே இறந்திருந்தார்
அந்த கறுப்புநாளை மறக்கவில்லை
அயலவர் கூடிவர இறுதிவலம்
அமைதியாக நடந்தேறியது
எனக்கென இருந்த பந்தம் இறுதியானது
அவர் இருப்பதைவிட இறந்தது மேலென
என் கதுகளுக்கே கேட்குமளவு
உரைத்தார்களதை மறக்கவில்லை
விதியின் சதுரங்கமிதுவாவென்று
வானம் பார்த்து மல்லாந்திருந்த என்மனம்
அனாதையும் நான் அவஷ்த்தையும் நான்
விதவையும் நான் பாவமும் நான் என்று
கடந்தவைகளை அசைபோட்தை மறக்கவில்லை
என்துரதிஷ்டமா என்னைத்துரத்துகிறதென்று
வீட்டினுள் முடங்கிக்கிடக்கலானேன்
வீதியில் நடக்கும்போது உலகமே எனைப்பார்த்து
ஒதுங்கிப்போ... இப்பேதையை வி்ட்டு - என
நகர்வதாய் உணர்ந்தேனதை மறக்கவில்லை
கிடைத்தவற்றைக் கையிலெடுத்து
வீட்டைவிட்டு கால்போன போக்கெல்லாம்
நடக்கலானேன் என்னை மறந்து
அம்மாவென்ற அலறல் குரல்கேட்டு
திரும்பினேன் திடுக்கிடுகிறேன்
தனிமையில் தத்தளிக்கிறதோர் அனாதை
வாரியணைத்த போது தாய்மையுணர்ந்தேன்
அதை இதுநாள்வரை மறக்கவில்லை
தொடர்வாள் ................
அனாதையுடன் அனாதையொன்று சேர
ஆரத்தழுவி அணைத்தபடி அங்குமிங்கும்
அரவம் தேடினேன் யாருமில்லை
யாரது சேயோ எனக்களித்தவர் யாரோ
விடைகளற்ற கேள்விகளோடு
வீதியில் இறங்கி நடந்ததை மறக்கவில்லை
என்னைப்போல் நீயுமா வென
நோக்கினேன் மழலையை
அவளது புன்சிரிப்பில் புதையுண்டேன்
புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே
காலத்தின் கொடுமையிதுவா வென
வெறுத்ததென்மனம அதை மறக்கவில்லை
முடித்திட நினைத்த வாழ்வுக்கு
முகவரி தந்த குழந்தையை முத்தமிட்டு
முழுத்தாயாய் நான் மாறி
அவளையும் பார்போற்றச் செய்து
அனாதைகளற்ற உலகம் நாட
உணர்ந்தேனதை மறக்கவில்லை
ஓய்வின்றி ஓடிய கடிகார முட்கள்
பல நாட்களையும் கடத்திவிட்டன
என் குழந்தை வளர்ந்தாள் - தன்னை
தானாக வளர்த்துக்கொண்டாள்
நடந்த பாதைகளெல்லாம் வெற்றகளோடும்
வீடுதிரும்பலானாள் வியந்தேன்
உரமேற்றினேனதை மறக்கவில்லை
பட்டமரமாய் பாழடைந்த வீடாய்
ஆனதென் வாழ்க்கைக்கு ஆண்டவன்
சேர்த்த துணை மகளென்றே இருந்துவிட்டேன்
மறுவாழ்வு பற்றி நினைக்காத என்னை
மனைவியாய் ஏற்கத் துடித்தனர் பலர்
ஏமாற்றங்களைப் பயந்து
எட்டியோடியதை மறக்கவில்லை
மனிதப்பிறவியான என் மனதுக்கும்
கடிவாளமிடத்துணிந்தானொருவன்
என்தவத்தினையும் கலைக்க நாடினான்
காய்ந்து கிடந்த கரிசல்காட்டினுள்
தீயிட்ட பாவியாய் தொடர்ந்தானொருவன்
துடித்தது தேகமெல்லாம் தொடரவும்
மறுத்தது என்மனம் அதை மறக்கவில்லை
வருவாள் புது மகளாய்
திருமணவாழ்வுடன் தொடர்ந்துஇருமன மகிழ்வுடன் கலந்து
பல மனங்களின் சங்கமத்தில்
அங்கங்கள் கொள்ளும் சங்கமமே
வாழ்வின் வெற்றி என்று என்மனம்
சில தினங்களில் ஏங்கியதை மறக்கவில்லை
வாலிபத்தின் முதிர்வும்
தனிமைகளின் வெறுப்பும்
ஈர்ப்புகளை ஏந்திக்கொள்ள
வழிசெய்து வகைசெய்ததை
வார்த்தைகளில் மாத்திரம்
மறுத்திருந்ததை மறக்கவில்லை
என்நிலை உணர்நது என் கரம் பற்றிட
வந்தவர்களுள் மேன்மையானவரென
போராடிய என் மனதிற்கு ஆறுதலாய்
தொடர்ந்தவனின் தொடர்புகள்
அவனைத் திரும்பிடச்செய்ததை
காதலென்று உணர்ந்ததை மறக்கவில்லை
மறுவாழ்வும் கிடைக்கிறது - என்
திருமகளுக்கும் தந்தைவாழ்வு
உறுதியாகிறதென்ற மங்கல நிகழ்வுகள்
மகிழும் தினங்களாக எங்களின்
வாழ்க்கைக்கு வழிசெய்ததை
ஏற்றிருந்தேனதை மறக்கவில்லை
அமைதியாய் அலங்காரமின்றி
நடந்தேறிய மறுமண தினத்தில்
அனாதைகளுக்கு அன்னதானமளித்து
அவர்களின் முகத்தின் மகிழ்வுகளோடு
புதுவாழ்வை புதுப்பித்த தினமதை
புத்துணர்வாய் மகிழ்ந்தேனதை மறக்கவில்லை
நான் வெறுத்திருந்த வேதனைகள்
வேரோடு அகல்கின்றதாய்
ஆறுதல் கரங்களின் அரவணைப்பில்
ஆட்பட்டு ஆசுவாசப்படுகிறேன்
என் வாழ்விலும் மகிழ்கிறேனென
களிப்பில் மகிழ்ந்ததை மறக்கவி்ல்லை
எத்தனை துன்பங்கள் என்னையும் தொடர
உறுதியான போராட்டங்களுடன்
தடம் புரளாத என் உயரிய நடத்தையின்
வெகுமானமாய் தாமதித்தேனும்
தரமான வாழ்வை அடைந்ததாக
உணர்ந்தேனதை மறக்கவில்லை
தேகத்தை இரைகளாக்கி இழப்புகளுக்கு
ஈடுகொடுத்திடத் துணிவோருக்கு
சாட்டையடியாய் வாழ்ந்து காட்டினேன்
துணிவின் துணைகொண்டு
வாழ்க்கையின் இமயம் தொட்டிருக்கிறேன்
என்றெல்லாம் இறுமாப்போடு
கடந்த நாட்களை இன்னும்தான் மறக்கவில்லை
தொடர்வாள்...........
அவளாகிய அவள்....................... பாகம் 15புத்துயிர் பெற்ற
புதுமைப்பெண்ணாய்
புது வாழ்வின் புகழ்ச்சியோடு
காலம் எனைவிட்டகன்று
சென்றதை மற்க்கவில்லை
திடமான உறுதியுடனும்
அவசியமான தைரியத்துடனும்
என்மகளையும் வேங்கையாய்
வடித்தெடுத்து அழகு பார்த்தேனதை
மறக்கவில்லை
கணவனுக்குத் துணையாய் நடந்து
காதலின் உச்சத்திலாழ்ந்து
மறுவாழ்வில் வெற்றியும் கண்டு
அவலங்களேயற்ற
அரியவாழ்வடைந்தேனதை மறக்கவில்லை
எப்படி இருந்தாளிவள்
எப்படி வாழந்தாளிவள்
பெண்ணாய்ப்பிறந்து
பெண்மையை உணர்ந்து
வாழ்வை வாழ்ந்து காட்டிய
சாதனைப்பெண்ணிவள்
கூடியிருந்தோர் பேசுகிறார்கள்
என் காதுகளினூடே
என் இதயம் தொடுகிறது வார்த்தைகள்
என் நாடியும் தளர்கிறது
உலகுக்கு விடைகொடென்று
எமன் என்னை அழைக்கிறார்
முற்றும்
மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண் தனது வாழ்வை மீட்டிப்பார்த்ததாய் கருவை அமைத்து கவிதையாக்கியிருந்தேன் கருத்துகள் எதுவாகினும் வரவேற்கிறேன் அனைவருக்கும் நன்றிகள்
2 comments:
வணக்கம்
தங்களின் தொடர் கதை நன்றாக உள்ளது,.. PDF பயிலாக அனுப்ப முடியுமா மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@ரூபன்
மிக்க நன்றி சகோ முயற்சிக்கிறேன்
Post a Comment