ஆடவருகிறான் அன்னியதேசத்துச் சோனகன்
கொடிபிடிக்கத்தயாராகிறான் என் தேசத்துச் சகோதரன்
அன்புச் சகோதரனே உன்தேசத்தை வெல்ல வருகிறான்
மாற்றானின் வெற்றிக்காய் எப்படி உன்னால்
குரலெழுப்ப குதூகலிக்க முடிகிறது
எம்மார்க்கம் கற்றுத்தந்த தேசத்துக்கான தியாகத்தை
துச்சமென தூக்கியெறிந்து என்மதத்தவனென்று
எம்தேச ஒற்றுமைக்குப் பங்கம் விழைவித்து
உடன்பிறப்பிற்கே எதிரியாய் நீயானதை
எப்படி உன்னால் மறுக்க முடியும்
தூரதேசத்தவனுக்கு கூஜா தூக்கிவிட்டு
என்தேசமென்று மார்புதட்டுபவனிடம்
எதிர்வாதம் புரிதலில் நியாயம்தான் கிடைக்குமா
நீ நேசிக்க மறந்த உன்தேசத்தை
பூஜிப்பவன் சொந்தம் கொண்டாடினால்
உன்வாதம்தான் ஜெயித்திடுமா??
உன்தாய்க்கு நிகரான தாய்நாட்டைநேசித்து
மதத்தின் வாயிலாக மாற்றானின் மனங்களை வென்று
உன்தேசத்தில் பிறந்தபயனுக்காய்
நாசம் கண்டிடாத ஒற்றுமையினை
நிலைநிறுத்துவதில் தர்மமாகிடாதா...???
