சத்தமின்றிக் கடந்த
யுத்த நிறைவின் மூன்றாண்டில்
இன்னும் மருந்தின்றிய
தழும்புகளோடு அழுகிறது நாடு
வென்றோம் எங்கள் நாடென்று
குதூகலிக்கும் சாராரும்
இறந்தவர்களுகாய் இரங்கல் செய்வோரும்
இருப்பவர்களின் பிணிதீர்க்க
இம்மியளவும் நினைத்திடவில்லை
மூன்றாண்டு கடந்தும்
முடிவுக்கு வராத சிறைபிடிப்புகளும்
நிறுத்திடாத இனத்துவேசங்களும்
நிர்க்கதியற்ற வாழ்வுகளும்
உண்மையான வெற்றியாகிடுமா??
அழிந்தவர்களின் நாமங்களோடு
அழித்தவர்களைப் பழிதீர்க்க
இருப்பவர்களின் வதை போக்காது
வாய்ப்பேச்சுகளில் யுத்தம் செய்து
ஊனங்களுக்கு உபத்திரம் சேர்ப்பதில்
காணத்துடிப்பதுதான் எதுவோ....!!!
இரு சாராருக்கும் நடுவில்
அப்பாவி உயிர்களங்கு
அல்லல் படுகிறது உணவுக்காய்
ஈழமண்ணோ இலங்கை மண்ணோ
வயிற்றுப் பசிக்காய் அழும்
உயிர்களின் கதறல்கள்
யாருக்குமே கேட்கவில்லையே....!!!
சுற்றுலா எனும் பெயரிலும்
வெற்றி விழா எனும் பெயரிலும்
இரங்கல் விழா எனும் பெயரிலும்
வீணடிக்கும் கிரயங்களை சேர்த்து
ஈழமண்ணின் உயிர்களுக்கு
இரைகளுக்காகக் கொடுத்திடுங்கள்
பிரதேசவாதங்களோ
மதத்துவேசங்களோ அற்று
தன் (மனித)இனத்திற்குச் செய்யும்
உபகாரமாய் நினைத்து
ஓர் உயிருக்கேனும் அபயமளியுங்கள்
அங்கு காண்பீர்கள் பல வெற்றிகளை
தொடரும் துயர்களில்தான்
தளிர்விடுகிறது வெறுப்புகள்
வெறுப்பின் உச்சத்தில்தான்
அழிவின் ஆரம்பம் உதயமாகிறது
ஆளப்பிறந்தவனையும் ஆட்டிவைக்கும்
துயர்களுக்குத் தீர்வு வேண்டாமா........???
1 comments:
சத்தமின்றிக் கடந்த
யுத்த நிறைவின் மூன்றாண்டில்
இன்னும் மருந்தின்றிய
தழும்புகளோடு அழுகிறது நாடு
சமுக அவலங்களை உரித்துப்பார்க்கும் உங்கள் பணி தொடரட்டும்
Post a Comment