ஆடவருகிறான் அன்னியதேசத்துச் சோனகன்
கொடிபிடிக்கத்தயாராகிறான் என் தேசத்துச் சகோதரன்
அன்புச் சகோதரனே உன்தேசத்தை வெல்ல வருகிறான்
மாற்றானின் வெற்றிக்காய் எப்படி உன்னால்
குரலெழுப்ப குதூகலிக்க முடிகிறது
எம்மார்க்கம் கற்றுத்தந்த தேசத்துக்கான தியாகத்தை
துச்சமென தூக்கியெறிந்து என்மதத்தவனென்று
எம்தேச ஒற்றுமைக்குப் பங்கம் விழைவித்து
உடன்பிறப்பிற்கே எதிரியாய் நீயானதை
எப்படி உன்னால் மறுக்க முடியும்
தூரதேசத்தவனுக்கு கூஜா தூக்கிவிட்டு
என்தேசமென்று மார்புதட்டுபவனிடம்
எதிர்வாதம் புரிதலில் நியாயம்தான் கிடைக்குமா
நீ நேசிக்க மறந்த உன்தேசத்தை
பூஜிப்பவன் சொந்தம் கொண்டாடினால்
உன்வாதம்தான் ஜெயித்திடுமா??
உன்தாய்க்கு நிகரான தாய்நாட்டைநேசித்து
மதத்தின் வாயிலாக மாற்றானின் மனங்களை வென்று
உன்தேசத்தில் பிறந்தபயனுக்காய்
நாசம் கண்டிடாத ஒற்றுமையினை
நிலைநிறுத்துவதில் தர்மமாகிடாதா...???
ஒரு சாதாரண ஆட்டமென்று காணாது
தந்தை மகனுக்கிடையில் வெறுப்பு
சகோதரன் சகோதனுடன் வெறுப்பு
அயலவன் அயலவருடன் வெறுப்பு
விளைவு ஆட்டம் முடியும்வரை பரபரப்பு
ஆகுமா இவை சிந்தித்திருப்பீரா இதை...??
வெளிநாட்டு வாசிக்குத்தெரியும்
சொந்த நாட்டின் அருமை எதுவென்று
நீ ஆதரக்கும் தேசத்தவனும் உனை
கிண்டல்செய்யும் நிலையினை நீ உணர்வாய்
வேண்டாமே தோழா இந்த அவமானம்
மாற்று இனத்தவன் காணும்
ஒரு முஸ்லிமின் நடத்தையில்
ஒட்டுமொத்த சமுகத்தினையும்
இழிவு படுத்துகிறான் காணச் சகிப்பதில்லை மனம்
காரணமின்றி என் சமுகம்
என் சகோதரனால் அவதியுறுகிறது
இத்தனையும் எதனால் அன்பனே ஆய்ந்துபார்
அத்தனையும் அற்பம் ஒரு விளையாட்டு
உன் மனம் அனைத்தையும் மீறி ஆதரிக்கிறதா
அடக்கிவாசித்துக்கொள் உன்னுள்ளே
அங்கலாய்த்து ஆசுவாசப்படாதே.....
தேசமும் உனக்காய் பிரார்த்தனை செய்யும்
வெகுநாளாய் எழுத நினைத்திருந்த ஒரு விடயமிது இலங்கை நாட்டின் தற்போதய நிலையில் இனங்களின் முறுகல் நிலை வலுப்பெற்றிருக்கிறது சிறுவிடயம் கிடைத்தாலும் அதனை பெரிது படுத்தி அதில் அரசியல் செய்வதில் பேரினவாதமும் தரகர்களும் காத்திருக்கிறார்கள் அன்பர்களே எதிர்வருகின்ற தினங்களில் இலங்கை பாகிஸ்தான் கிரிக்கட் ஆட்டம் நடைபெற இருக்கிறது எமது நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் இளைஞர்களுக்கு எவ்வளவுதான் சொன்னாலும் தெளிவு பெறமாட்டார்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதரீதியாக நாங்கள் ஆதரிக்கிறோம் என்று வாதிட்டு பேரினவாதிகளுக்கு அடையாளங் காட்டுவதற்குத் தவறுவதில்லை இது முற்றிலும் தவறானது இலங்கை தேசத்தில் பிறந்து மற்றொரு தேசத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் குதூகலிப்பதை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாதுதான் இதனால் பெரும் விளைவுகள் வருவதை தவிர்க்குமுகமாக அனைவரும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் பிரிவினை ஏற்படுவதற்கு வழிகளை தேடிக்கொடுத்திடாதீர்கள் ஆதரவாக இருந்தாலும் மனதளவில் அதை வைத்துக்கொள்ளுங்கள் வெளிப்படுத்தி விபரீதங்களை ஏற்படுத்திடாதீர்கள்
4 comments:
மிகச்சரியாகவே சொன்னீர்கள்.. நாம் பிறந்த மன்னைத்தான் எங்கு சென்றாலும் நேசிக்க வேண்டும் ஆதரிக்க வேண்டும்.. சில அரைவேக்காடுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை..
அருமையான கருத்துக்கள் சார் ! வாழ்த்துக்கள் !
NALLA SONNEENGA!
It's nice keep it up
Post a Comment